உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது :
ஏழு தமிழர்களையும்
உடனே விடுதலை செய்ய வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
நாம் நீண்ட நாளாக வலியுறுத்தி வருவதை உறுதி செய்வதுபோல், ஏழு தமிழர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இராசீவ் கொலையில் தண்டனை வழங்கப்பட்டு கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக - சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி இரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (06.09.2018) தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி, மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதில் மாநில அரசின் அதிகாரம் கட்டற்றது; எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் செயல்படக்கூடியது என்று மாரூராம் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடங்கி, இறுதியில் இதே வழக்கில் (இந்திய ஒன்றிய அரசு - எதிர் - முருகன் (எ) சிறீகரன் மற்றும் பிறர்) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரை தெளிவுபடுத்தியுள்ளது.
இதனடிப்படையில், தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்து உறுப்பு 161இன்படி ஆளுநர் வழியாக ஆணையிட்டு ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென தொடர்ந்து நாமும் பல்வேறு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் அறிவுறுத்தி வந்தோம். இப்போது, நீதிபதி இரஞ்சன் கோகாய் அமர்வு இன்னும் உறுதியாக தெளிவுபடுத்திவிட்டது!
ஏழு தமிழரையும் விடுதலை செய்ய 2014 – பிப்ரவரி 18இல், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, செயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைச்சரவை முடிவாக ஆளுநருக்கு அனுப்பி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
0 கருத்துகள்:
Post a Comment