முல்லைப் பெரியாறுச் சிக்கலில்
“துக்ளக்” குருமூர்த்தியின் இரண்டகம்!
தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டிக் கொள்வதற்கு கேரள அரசு முயல்வதை ஆதரித்து “துக்ளக்” ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, 14.11.2018 நாளிட்ட “துக்ளக்” இதழில் கட்டுரை எழுதியிருக்கிறார். கேரள அரசின் இந்த அடாவடித்தனத்தை எதிர்க்கிற தமிழ்நாட்டுக் கட்சிகள், ஏதோ முல்லைப் பெரியாறு சிக்கல் பற்றி எதுவும் தெரியாமல் கூக்குரல் எழுப்புவதாக தூற்றுகிறார்.
“எதற்கெடுத்தாலும் கோஷம் போட்டு, கொடி பிடித்து, பந்த் நடத்தும் கட்சிகளுக்கும், தலைவர் களுக்கும் முல்லைப் பெரியாறு வரலாறு பற்றி எவ்வளவு தெரியும் என்று தெரியவில்லை’’ என எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் கதையளந் திருக்கிறார்.
திண்டுக்கல், தேனி மாவட்டத்தின் பெரும்பாலான உழவர்களுக்கும், தமிழ்நாட்டுக் கட்சிகளின் தலைவர் கள் பலருக்கும் தெரிந்த முல்லைப் பெரியாறு குறித்த வரலாற்றுச் செய்திகளையே ஏதோ புதிதாக விளக்க முற்பட்டவர் போல மேதாவித்தனமாக குருமூர்த்தி விளக்கியிருக்கிறார்.
முல்லைப் பெரியாறு சிக்கலின் வரலாற்றை விளக்குவதுபோல் எழுதிக் கொண்டே வந்தவர் “நீதிபதி ஆனந்த் குழு புதிய அணை ஒன்றைக் கட்டும்படி பரிந்துரைத்தது” என்று திரிபான தகவலை செருகு கிறார். (பக்கம் 33, துக்ளக் இதழ், 14.11.2018).
முல்லைப் பெரியாறு வழக்கில் கேரள அரசு அணையின் உறுதித்தன்மை குறித்து ஐயம் எழுப்பி, அது உடைந்தால் கேரள மக்களுக்கு பெரும் சேதம் ஏற்படும் என்று அச்சத்தை எழுப்பிதான் அணையின் தண்ணீர் உயரத்தை 142 அடி தேக்க முடியாது என்று எதிர்த்து வந்தது.
கேரள அரசின் இந்த ஐயம் சரியானதுதானா என்ற கண்டறிய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில், “அதிகாரம் பெற்ற குழு”வை உச்ச நீதிமன்றம் அமர்த்தியது.
நீதிபதி ஆனந்த் குழு முல்லைப் பெரியாறு அணையின் நீரியல் பாதுகாப்புத் தன்மை, அணையின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு, நிலநடுக்கம் ஏற்பட்டால் அணைக்கு ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக இந்திய அரசின் நடுவண் நீர் ஆணையம், மண்ணியல் ஆய்வு நிறுவனம், நீர் மற்றும் ஆற்றல் ஆய்வு நிறுவனம், நில அதிர்வின் விளைவுகளை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனங்கள் போன்ற பல ஆய்வு நிறுவனங்களின் ஆய்வுக்கு உட்படுத்தியது.
இவை அனைத்தையும் தொகுத்து விரிவான பகுப் பாய்வு மேற்கொண்ட நீதிபதி ஆனந்த் குழு, முல்லைப் பெரியாறு அணை நீரியல் வகையில் பாதுகாப்பானது, எனவே அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்தது.
“முல்லைப் பெரியாறு அணை கட்டமைப்பு வகையில் பாதுகாப்பான வகையிலேயே உள்ளது. அணையின் தண்ணீர்க் கசிவு அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளது. அணைச் சுவர்களின் காரைப் பூச்சுகள் தண்ணீரில் கரைந்திருப்பது அணையின் பாதுகாப்பை எந்த வகையிலும் பாதிக்கும் அளவுக்கு இல்லை’’ என்றும் ஆனந்த் குழு அறிக்கை தெளிவு படுத்தியது.
“நிலநடுக்க ஆய்வுகளை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாடு அரசு அணையை வலுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டதற்குப் பிறகு (Cable Anchoring) அணையின் உறுதித்தன்மை நிலநடுக்கத் தினால் எந்தவகையிலும் பாதிப்பு அடையாது என்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே, 152 அடி வரையிலும் அணையில் நீர்த் தேக்கினாலும் நிலநடுக்க பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பது உறுதியாகிறது’’ என்றும் ஆனந்த் குழு உறுதி கூறியது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, கேரள மாநில அரசு தனது புதிய அணைத் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றுதான் நீதிபதி ஆனந்த் குழு அறிக்கை அளித்தது. (ஆனந்த் குழு அறிக்கை, பக்கம் 105).
அதனடிப்படையில்தான், உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர்த் தேக்கலாம் என்று 07.05.2014 அன்று தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்புதான் செயலில் இருக்கத் தகுதியுடையது! இத்தீர்ப்புக்குப் பிறகு, ஆனந்த் குழுவின் “மாற்று ஆலோசனைகள்’’ (Alternative Suggestions) செயல்பாட்டில் இருக்கும் சட்டத் தகுதி அற்றவை!
ஆனந்த் குழுவின் உறுதியான மேற்கண்ட அறிக்கைக்கு பிறகும்கூட, உச்ச நீதிமன்றம் ஒரு மேற்பார்வைக் குழுவை அமர்த்தி அவ்வப்போது முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி பணித்தது.
இதனடிப்படையில் தொடர்ந்து, அணை ஆய்வுக் குழு முல்லைப் பெரியாறு அணையை நீரியல், மண்ணியல், நில நடுக்கவியல், கட்டமைப்பியல் போன்ற பல வழிகளிலும் அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை அளித்து வருகிறது.
அண்மையில், 2018 ஆகத்து 4 அன்று அணையை ஆய்வு செய்த மேற்பார்வைக் குழு முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருப்பதை உறுதிப்படுத்தி, 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று அறிக்கை அளித்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த போது நீதிபதி ஆனந்த் குழு ஒரு மாற்றுத் திட்டமாக தமிழ்நாடு அரசின் இசைவோடு கேரள அரசு புதிய அணை கட்டிக் கொள்ளலாம் என்றும், அந்தப் புதிய அணையின் செயல்பாடு - மேலாண்மை போன்ற வற்றைக் கூட்டாக நிர்வாகம் செய்வதற்கு இருமாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டால் அவ்வாறு புதிய அணைக் கட்டிக் கொள்ளலாம், இது ஏற்பில்லை என்றால் புதிய நிலத்தடிக் குழாய் அமைத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை கூறியது.
கேரள அரசு 2015ஆம் ஆண்டில், இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு புதிய அணை கட்டும் முன்மொழிவை வைத்தபோது, அது பற்றி ஆய்வு செய்வதற்கு முன்னால் சுற்றுச்சூழல் அமைச்சகம் தமிழ்நாடு அரசின் கருத்தைக் கேட்டது. அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா 10.06.2015 நாளிட்ட தனது கடிதம் வழியாக இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட சுற்றுச்சூழல் அமைச்சகம், 2015 சூலை கூட்டத்தில் தனது ஆய்வு நிகழ்ச்சி நிரலிலிருந்தே அதை நீக்கியது.
ஏனெனில், சுற்றுச்சூழல் அமைச்சகம் இதுகுறித்து பரிசீலிப்பதற்கு தமிழ்நாடு அரசின் முன் இசைவு நிபந்தனையாகும். இதைத்தான் ஆனந்த் குழுவும், அதனடிப்படையில் உச்ச நீதிமன்றமும் அறிவித்திருக் கின்றன.
உண்மை இவ்வாறிருக்க, “துக்ளக்’’ குருமூர்த்தி உச்ச நீதிமன்றம் “நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைவமையில் ஐந்து உறுப்பினர் குழு ஒன்றை அமைத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, பஞ்சாயத்து செய்ய முயன்றது’’ என்றும், “நீதிபதி ஆனந்த் குழு புதிய அணை ஒன்றைக் கட்டும்படி பரிந்துரைத்தது’’ என்றும் முற்றிலும் பொய்யான செய்தியை “முல்லைப் பெரியாறு சிக்கலின் வரலாறு’’ என்ற போர்வையில் நுழைக்கிறார்.
“நீதிபதி ஆனந்த் குழு” என்பது உச்ச நீதிமன்றத்திற்கு உதவி செய்வதற்காக அமர்த்தப்பட்ட அதிகாரம் பெற்றக் குழுவாகும் (Empowered Committee). இக்குழு பல துறை ஆய்வு நிறுவனங்களையும் துணையாகக் கொண்டு, முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையைப் பற்றி உண்மை நிலையை அறிவியல் வழிப்பட்டு வழங்குவதற்காக அமர்த்தப்பட்டக் குழு வாகும். அந்தப் பணியைத்தான் ஆனந்த் குழு செய்தது.
ஆனால், அடிப்படையான இந்த உண்மையைத் திரித்து ஆனந்த் குழு இரு மாநிலங்களுக்கிடையிலும் சமரசம் பேச (பஞ்சாயத்து செய்ய) அமர்த்தப்பட்ட குழு என்பதாக பொய்யுரைத்து, தனது தமிழினத் துரோகத்திற்கு வாதம் சேர்க்க முயல்கிறார்.
குருமூர்த்தியின் கூற்று திட்டமிட்ட தமிழினப் பகை நோக்கம் கொண்ட உண்மை நிலைக்கு முற்றிலும் மாறான பொய்யுரை ஆகும்!
ஆனந்த் குழுவின் ஆய்வறிக்கைக்கும், அதன் அடிப்படையிலான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணாக இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரள அரசின் புதிய அணைத் திட்டத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதே சட்டக் கவிழ்ப்பு ஆகும்! இதனை ஒருபோதும் ஏற்க முடியாது!
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் சூதான முயற்சிக்கு எதிராக, “கோஷம் போடுவதும், கொடி பிடிப்பதும், பந்த் நடத்துவதும்’’ - விவரம் தெரிந்த - சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை கொண்ட மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய சனநாயக வழிப்பட்ட முயற்சிகளாகும்!
0 கருத்துகள்:
Post a Comment