தன்னாட்சி இழக்கும் சேம வங்கி
தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
இந்திய அரசமைப்பின் அதிகாரச் சமநிலையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்புகள் ஒவ்வொன்றாக கவிழ்க்கப்பட்டு, மோடி ஆட்சியின் பாசிச அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்ததாக மாற்றப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். அவற்றின் புதிய உச்சமாக நரேந்திர மோடிக்கும் ரிலையன்சு அம்பானிக்கும் ஒத்திசைவான உர்சித் பட்டேல் இந்திய சேம வங்கியின் ஆளுநராக்கப்பட்டார்.
உர்சித் பட்டேலின் கேள்வி கேட்காத கீழ்ப்படிதலைப் பயன்படுத்தித்தான், சேம வங்கியின் பெரும்பாலான இயக்குநர்களின் எதிர்ப்பையும் புறந்தள்ளி, “செல்லாத பணத்தாள்” அறிவிப்பை மோடி அடாவடியாக வெளியிட்டார்.
இன்னொரு பக்கம், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான ஒட்டுண்ணி வலைப்பின்னல் முதலாளிகளுக்கு கேள்வி முறையில்லாமல் கடனை வாரி இறைத்ததால், வாராக் கடன்கள் இப்போது 7 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டன.
சேம வங்கியின் ஆண்டு உபரித் தொகையில், ஏறத்தாழ 99 விழுக்காட்டுத் தொகை மோடி ஆட்சிக்கு வந்த 2014லிருந்து 2017 வரை வழங்கப்பட்டு, அத்தொகையில்தான் மோடியும், அவருக்கு வேண்டிய “பெரும்புள்ளி”களும் மக்கள் பணத்தை தங்கள் சொந்தப் பணம் போல் பயன்படுத்துகிறார்கள்.
இவ்வளவுக்குப் பிறகும், மோடி ஆட்சி சேம வங்கியை தமது சொந்த வீட்டுப் பணப் பெட்டி போல் பயன்படுத்த நினைத்ததால், அதன் ஆளுநரே மோடி ஆட்சிக்கு எதிராக வெளிப்படையாக பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2018 அக்டோபர் 26 அன்று, மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய சேம வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, “இந்திய அரசு நடுவண் வங்கியின் தன்னாட்சித் தன்மையை மதிக்கத் தவறினால், அது உடனடியாகவோ பின்னாளிலோ நிதிச்சந்தையின் சீற்றத்தை சந்திக்க நேரிடும். இந்தியாவின் முகாமையான பொருளியல் ஒழுங்குமுறை நிறுவனத்தை தனக்குக் கீழே தாழ்த்த நினைக்கும் நாள் அரசு வருத்தப்பட வேண்டிய நாளாக அமைந்து விடும்” என்று விரிவான தகவல்களோடு எச்சரித்தார். சேம வங்கி ஆளுநர் உர்சித் பட்டேலின் ஒப்புதலோடு, இதைப் பேசுவதாகவும் ஆச்சார்யா அறிவித்தார்.
இதற்குப் பிறகு, சேம வங்கியை வெளிப்படையாகவே இந்திய நிதியமைச்சர் அருண் செட்லி குற்றம் சுமத்தி மிரட்டத் தொடங்கி விட்டார்.
ஏற்கெனவே, சேம வங்கியின் இயக்குநர் அவை மாற்றப்பட்டு, குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ். ஆட்களால் நிரப்பப்பட்டுவிட்டது. இந்த “இயக்குநர் அவை”யை வைத்து, தான் சொல்லுகிற ஆட்களுக்கு தாராளக் கடன் வழங்கச் செய்வதும், அந்தக் கடன் தொகையில், தனது கட்சியின் 2019 நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்காக பல்லாயிரம் கோடி கையூட்டுப் பெறுவதும் என்ற அலங்கோலமான திட்டத்தில் மோடி ஆட்சி இருக்கிறது.
முற்றிலும் கைப்பொம்மையாக மாற வேண்டும் அல்லது பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற நெருக்கடியில், சேம வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள்.
ஏற்கெனவே மோடி அரசு தேர்தல் நிதிப் பத்திரங்கள் (Election Bond) வெளியிட்டு, நிதித் திரட்டுவதற்கு சட்டத்திருத்தம் செய்து விட்டது. யார் கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள் என்று எதுவும் தெரியாமல், கருப்புப் பணத்தைக் கைமாற்றிக் கொள்வதற்கு வலுவான ஏற்பாடு இது!
இது தேர்தல் முறையையே குடை சாய்த்து விடும் என்று அப்போதைய தேர்தல் ஆணையர் நசீன் சைதி எச்சரித்தார். உடனே அவருக்குப் பிறகு, ஏ.கே. ஜோதி என்ற தனக்கு இசைவான நபரை தேர்தல் ஆணையராக மோடி ஆட்சி அமர்த்தியது. அவர் இந்தக் கருப்புப் பணக் கூட்டணி முயற்சியை ஆதரிக்கிறார். தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பும் நிலைக் கவிழ்க்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவம் தற்சார்பானதாக ஆளும்கட்சி - எதிர்க்கட்சி என்ற சார்பு இல்லாமல் இருந்து வந்தது. இதைக் குடை சாய்க்க தனக்கு வேண்டிய பிபின் இராவத் என்பவரை, அவருக்கு மேல் உள்ள இரண்டு பணி மூப்பு பெற்ற மூத்த அதிகாரிகளைப் புறந்தள்ளி மோடி ஆட்சி தலைமைத் தளபதியாக அமர்த்தியது. எல்லை தாண்டி பாக்கித்தானில் நடத்தப்பட்ட “துல்லியத் தாக்குதலை”, அவர் பா.ச.க. பிரச்சார பீரங்கியாகவே பரப்புரை செய்து வருகிறார்.
நீதித்துறையில் மோடி ஆட்சியின் தலையீட்டைக் கண்டித்து, வரலாறு காணாத அளவில் செல்லமேசுவர், இரஞ்சன் கோகாய் உள்ளிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வெடித்ததை உலகம் கண்டது.
அரசமைப்புச் சட்டப்படி நிறுவப்பட்டுள்ள பல அதிகார மையங்களுக்கிடையில் சமநிலை பேணப்பட்டால்தான் சட்டத்தின் ஆட்சி நீடிக்க முடியும்! ஆனால், பாசிச பா.ச.க. ஆட்சியின் அதிகார மையக் கவிழ்ப்புகள் மிக நீண்ட வருங்காலத்திற்கு சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்துவிடும்!
ஒருவேளை, நாளைக்கு மோடியின் பா.ச.க. ஆட்சிப் போய் வேறு ஒரு கட்சியோ, கூட்டணியோ ஆட்சிக்கு வந்தால்கூட இந்தக் குலைவுகள் அனைத்தையும் சீர் செய்துவிட மாட்டார்கள். அதிகாரத்தின் சுவை அப்படிப்பட்டது!
வெள்ளை ஏகாதிபத்தியம் பிறப்பித்த பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களையும், நிறுவனங்களையும் விடுதலை பெற்ற இந்தியாவின் காங்கிரசு ஆட்சி, அப்படியே பாதுகாத்து வந்ததையும், அவை இன்னும் தொடர்வதையும் பார்க்கிறோம்.
அதிகாரச் சமநிலையை பாதுகாப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை நிலைப்படுத்துவதற்கும் குடிமைச் சமூகத்தின் நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும் என்பதைத்தான் மோடி ஆட்சியின் கவிழ்ப்புகள் காட்டுகின்றன.
0 கருத்துகள்:
Post a Comment