கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

தொடரும் ஆணவக் கொலைகள் : ஓசூர் சாதி மறுப்பு இணையர் கொலையில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!


தொடரும் ஆணவக் கொலைகள் :

ஓசூர் சாதி மறுப்பு இணையர்
கொலையில் காவல்துறை விரைந்து
நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


கிருட்டிணகிரியில் சாதி கடந்து காதல் திருமணம் செய்த இணையர்கள் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அக்கொலையை “தாங்களே செய்தோம்” என பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் காவல்துறையிடம் சரணடைந்து உள்ளனர். 

கிருட்டிணகிரி மாவட்டம் - சூளகிரி அருகிலுள்ள சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர் நந்தீஷ் (அகவை 25) என்பவரும், அதே பகுதியில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுவாதி (அகவை 21) என்பவரும், கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். நந்தீஷ் ஐ.டி.ஐ. படிப்பை முடித்துவிட்டு, ஓசூர் பேருந்து நிலையம் அருகில் தனியார் பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார். சுவாதி, ஓசூரில் மகளிர் கல்லூரி ஒன்றில் பி.காம். பயின்று வந்தார். 

இதனையடுத்து, நந்தீசின் தந்தை நாராயணப்பா சுவாதியின் இல்லத்திற்குச் சென்று முறைப்படி பெண் கேட்டபோது, சாதியைக் காரணம் காட்டி அதற்குக் கடுமையாக மறுத்துள்ளார் சுவாதியின் சந்தை சீனிவாசன். சுவாதியை கடுமையாகத் தாக்கி, வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 2018 ஆகத்து மாதம் வீட்டிலிருந்து வெளியேறிய சுவாதியும், நந்தீசும் சூளகிரி திம்மராயசாமி கோவிலில் 15.08.2018 அன்று திருமணம் செய்து கொண்டனர். 04.09.2018 அன்று, தங்கள் திருமணத்தை சூளகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவும் செய்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, ஓசூரில் தனது அலுவலம் அருகிலேயே இருவரும் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் குடியிருந்து வந்தனர். 

இந்நிலையில், கடந்த 2018 நவம்பர் 11ஆம் நாள், நந்தீசின் வீட்டிற்கு அவரது சகோதரர் சங்கர் சென்றபோது, நந்திஷ் - சுவாதி இருவரையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர்களது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இதுகுறித்து ஓசூர் காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்தார். 

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் - மாண்டியா மாவட்டத்தின் சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் இரண்டு உடல்கள் கரை ஒதுங்கிக் கிடப்பது குறித்து காவல்துறைக்குக் தகவல் வந்தது. இரு உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு, ஆணின் உடல் நீரில் மூழ்கிய நிலையிலும், பெண்ணின் உடல் கயிற்றால் கட்டப்பட்டு நீரில் மூழ்கிய நிலையிலும் மிகக் கோரமாகக் காட்சியளித்தது. 

இந்நிலையில், சுவாதியின் தந்தை சீனிவாசன், உறவினர்கள் - பெரியப்பா வெங்கடேசு மற்றும் கிருட்டிணன் ஆகியோர் கிருட்டிணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்து, தாங்களே தன் மகளையும் – அவரது கணவரையும் கொன்றதாகக் கூறினர். இதனையடுத்துதான், சிவசமுத்திரம் ஆற்றில் கிடந்த உடல்கள் நந்திஷ், சுவாதியின் உடல்கள் எனத் தெரியவந்தது. சுவாதி மூன்று மாதக் கர்ப்பிணி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கடத்தலுக்கு உதவிய மேலும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து, காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

கடந்த நவம்பர் 11ஆம் நாளே, நந்தீஷின் தம்பி சங்கர் காவல்துறையிடம் புகார் அளித்த போது, சுவாதியின் தந்தை சீனிவாசன் மீது சந்தேகம் இருப்பதாக ஓசூர் காவல்துறையிடம் கூறியுள்ளார். ஆனால், காவல்துறையினர் அது குறித்த விசாரிக்காமல் மெத்தனமாக இருந்ததும், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய மறுத்திருப்பதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. நவம்பர் 13-ஆம் நாள் கர்நாடக ஆற்றில் நந்தீஷ் – சுவாதி உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், நவம்பர் 14-ஆம் நாள் ஓசூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கடந்த அக்டோபர் மாதம், சேலம் மாவட்டம் – ஆத்தூரில், தினேசுகுமார் என்ற சாதிவெறியன் ஒடுக்கப்பட்ட வகுப்பு சிறுமி இராசலட்சுமியை பாலியல் வல்லுறவு கொள்ள முயற்சித்து, அவரது தலையைத் துண்டித்து மிகக் கொடூரமாக படுகொலை செய்த நிகழ்வு ஏற்படுத்திய அதிர்ச்சி அகலுவதற்குள், இப்போது கிருட்டிணகிரியில் நடந்துள்ள சாதிவெறிப் படுகொலை நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. 

தருமபுரியில், இரமேசு – சதீசு ஆகிய இரு கயவர்கள் பழங்குடியின மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய நிகழ்வின்போது, அது குறித்தப் புகாரையே வாங்க மறுத்தக் காவல்துறையினர், பெண்ணின் தந்தையிடம் கையூட்டு பெற்ற பிறகுதான் வழக்கேப் பதிவு செய்தனர். அதன்பிறகும், பாலியல் வன்கொமையை மறைக்க முயற்சித்துள்ளனர். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால், அப்பெண் உயிரிழந்த அவலமும் நடந்துள்ளது. 

அரசியல் - சமூகம் என அனைத்திலும் சாதியை வெறுத்து ஒதுக்கும் பொதுப் பண்பு வளர்ந்தால்தான், கணிசமான மக்களிடையே குடிகொண்டிருக்கும் சாதிவெறியை ஒழிக்க முடியும். இதுபோல், தொடர்ந்து நடைபெற்று வரும் சாதிவெறிக் கொடுமைகளை, காவல்துறையும், அரசும் மட்டுமின்றி, முதன்மையான கட்சிகளும் அலட்சியமாகக் கடப்பதென்பது, தேர்தல் கட்சிகளின் சாதி வாக்குவங்கி அரசியல் கணக்குகள் இவற்றின் பின் இருப்பதை உணர்த்துகின்றது. எனவே, இவற்றிலெல்லாம் மாறுதல்கள் வந்தாலொழிய, சாதிவெறிப் படுகொலைகளை முற்றிலுமாகத் தடுக்க முடியாது! 

நந்தீஷ் – சுவாதி இணையரைக் கொலை செய்தோர் மீதும், அதற்கு உதவியோர் மீதும் தமிழகக் காவல்துறையினர், கொலை, கடத்தல் பிரிவுகளிலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உடனடியாகவும், தீவிரமாகவும் உரிய வேகத்தில் இவ்வழக்கில் நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு, நந்தீஷ் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள், அறம் சார்ந்த விழுமியங்களோடும், விழிப்புணர்வோடும் சாதிவெறிப் படுகொலைகளை கண்டிக்க வேண்டும். 

0 கருத்துகள்: