கல்விக் கொள்கை குறித்து சூழ்ச்சியான கருத்துக்
கேட்பு நாடகங்களை உடனே நிறுத்துக!
வரைவுக்கொள்கை குறித்து
பொது விவாதம் நடத்துக!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
இந்திய அரசு முன்வைத்துள்ள “தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019” தமிழ்நாட்டில் கல்வியாளர்கள், ஆசிரியர் அமைப்புகள், மாணவர் சங்கங்கள், பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
இந்தக் கல்விக் கொள்கை வரைவு மாநில உரிமைகளைப் பறிக்கிறது; வரலாற்று வழியில் கல்வி மறுக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு கல்வியை மறுக்கிறது, தமிழ்நாட்டில் இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்கிறது. கல்வி தனியார்மயமாவதை ஊக்குவிக்கிறது. “கல்வித் தொண்டர்கள்” என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கல்விக் கூடங்களில் நுழைக்க இசைகிறது என்ற கவலைகளினால் தமிழ்நாட்டில் இந்த வரைவுக்குப் பரவலான எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.
இச்சூழலில், தமிழ்நாட்டின் கல்வியாளர்களிடையேயும், பெற்றோரிடையேயும் இந்தக் கல்விக் கொள்கை வரைவுக்கு ஆதரவு இருப்பது போல பொய்த்தோற்றத்தைக் காட்டுவதற்கு இந்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி. (NCERT) சூழ்ச்சியான முறையிலும், கமுக்கான வகையிலும் “கருத்துக் கேட்புக் கூட்டங்கள்” என்ற பெயரில் சிறிய அறைகளில் தமக்கு வேண்டிய சில பேரை வைத்து “கூட்டம்” நடத்தியதாகக் கணக்குக் காட்டி ஆதரவுக் கருத்து இருப்பதுபோல் சித்திரம் தீட்ட முயல்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 17.07.2019 அன்று கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியிலும், 19.07.2019 அன்று திருச்சி தூய வளனார் கல்லூரியிலும் நேற்று (22.07.2019) சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திலுள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளியிலும் இவ்வாறான கருத்துக் கேட்பு நாடகங்கள் நடைபெற்ற போது கல்வி உரிமையிலும் சமூகநீதியிலும் அக்கறையுள்ள பெற்றோர்களும், கல்வியாளர் களும், அரசியல் இயக்கங்களும் இந்த சூழ்ச்சித் திட்டத்தைக் கண்டித்து கேள்வி எழுப்பினார்கள்.
“கருத்துக் கேட்புக் கூட்டம்” என்பது பரவலாக அறிவிக்கப்பட்டு அதற்குரிய பெரிய அரங்கத்தில் பெற்றோர்களும், கல்வியாளர்களும், மாணவர்களும், கருத்து சொல்லக்கூடிய அரசியல் இயக்கத்தினரும் பங்கேற்கும் வகையில் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்பதைத் தான் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
மக்கள் சமூகத்தைக் கட்டமைப்பதில், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றும் கல்வி குறித்த கொள்கை விவாதம் அனைவரும் பங்கேற்கும் வகையில் திறந்த முறையில் சனநாயகமாக நடத்தப்படுவதுதான் சரியானது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
மாறாக, ஒரு துறையின் ஆசிரியர் அறையிலும், சிறிய கணிப்பொறி சோதனைக் கூடத்திலும் இன்னும் இதுபோல் 20 - 25 பேருக்கு மேல் அமர முடியாத சிறு அறைகளிலும் தாங்கள் பொறுக்கியெடுத்த சில பேரை மட்டும் வைத்துக் கொண்டு இவ்வாறான கூட்டங்களை இந்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி. ஏற்பாடு செய்வது - படுபிற்போக்கான 2019 கல்வித் திட்ட வரைவுக்கு ஆள் பிடிக்கும் மோசடியான முயற்சியாகும்!
சென்னை ஐ.ஐ.டி. வளாக கேந்திரிய வித்தியாலயாவில் 22.07.2019 அன்று இவ்வாறான “நாடகம்” அரங்கேற்றப்படும்போது அரசியல் இயக்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் அமைதியான முறையில் இந்த சூழ்ச்சியைத் தட்டிக் கேட்டனர்.
கல்விப் பாதுகாப்பு – சனநாயக அக்கறையுள்ள இந்த நடவடிக்கையை “ரவுடிகளின் அட்டகாசம்” என்று பா.ச.க. செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தூண்டுவது அப்பட்டமான சனநாயக மறுப்புச் செயலாகும்! இதனை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பா.ச.க. இந்திய அரசு மிக முக்கியமான கல்விக் கொள்கை குறித்து இவ்வாறு கமுக்கக் கூட்ட நாடகம் நடத்துவதுதான் “வெள்ளைக் காலர்” ரவுடித்தனமாகும்! இவ்வாறு கமுக்கக் கூட்ட நாடகங்கள் நடத்துவதை இந்திய அரசும், அதன் என்.சி.இ.ஆர்.டி.யும் உடனே நிறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசும் தனது பள்ளிக் கல்வித் துறையின் மூலம் இத்தவறான செயலுக்குத் துணை போகக் கூடாது!
மாறாக, தமிழ்நாடு அரசு “தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019” குறித்து பள்ளி - கல்லூரி, ஆசிரியர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், பாடத்திட்டங்களில் ஆலோசனைகள் வழங்கிய கல்வியாளர்கள், அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரிடையே திறந்த முறையில் விரிவான கலந்துரையாடல் நடத்த வேண்டும். இந்த வரைவுக் கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தையும் நடத்த வேண்டும்.
இதைவிட்டுவிட்டு படுபிற்போக்கான “தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019”ஐ தமிழ்நாட்டு மக்கள் மீது திணிப்பதற்கு சூழ்ச்சித் திட்டம் எதிலும் இந்திய அரசோ, மாநில அரசோ ஈடுபடக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
0 கருத்துகள்:
Post a Comment