காசுமீரின் உரிமைப் பறிப்பு :
370 இருக்கிறது – அதன் உயிர் மட்டும் இல்லை!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!
காசுமீரில் இன்று நடப்பது தமிழ்நாட்டின் மீது நாளை என்ன நடக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகும்.
தமிழீழத்தில் ஆரிய இந்தியமும், ஆரிய சிங்களமும் இணைந்து வல்லரசுகளின் மறைமுக ஆதரவோடு 2008 – 2009இல் உலகின் கண் முன்னே ஒரு இன அழிப்பை நடத்தி முடித்தன. அப்போது, தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் எந்தப் பகுதியும் அசையவில்லை!
அதைவிட, இந்தி மக்கள் தமிழின அழிப்பை கொண்டாடினார்கள். உத்திரப் பிரதேசத்தின அலிகார் பல்கலைக்கழக வாசலில் இந்தி பேசும் சாதாரண ரிக்சா தொழிலாளி பிரபாகரன் உடல் என்று தொலைக்காட்சியில் காட்டப்பட்டபோது வெடிவெடித்துக் குதூகலித்தான் என்று அங்கே வாழ்ந்த நமது தமிழின உணர்வாளர்கள் அதிர்ச்சியோடு குறிப்பிட்டதை நாம் மறக்கவில்லை.
இன்று கிட்டத்தட்ட ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட அதேநிலை காசுமீரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. காசுமீரிகளின் தாயகம், அவர்களின் அடையாளம், அவர்களின் தனித்தன்மை அழிக்கப்படும்போது வட இந்தியா கை தட்டி ஆரவாரிக்கிறது! தமிழ்நாட்டிலும்கூட ஒரு சாரார் ஒரு வரலாற்று அநீதி துடைக்கப்பட்டதைப் போல தவறாகக் கருதிக் கொண்டு, மோடி ஆட்சியின் இன அழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
ஆயினும், உரிமை உணர்வுள்ள தமிழர்கள் இந்திய வல்லாதிக்கத்தில் நமக்கு நாளை என்ன நடக்கும் என்பதற்கு இதுவொரு எச்சரிக்கை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே காவிரிச் சிக்கலில் – முல்லைப் பெரியாறு உரிமையில் – ஏழு தமிழர் விடுதலையில் – நீட் தேர்வில் – சட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லை – இந்தியா வழங்கும் சட்ட உரிமைகள் தமிழர்களுக்குப் பொருந்தாது என்று நிகழ்த்திக் காட்டப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.
காசுமீரைப் பொருத்த அளவில் இப்போது நாடாளுமன்றப் பெரும்பான்மை ஆதரவோடு சட்டக்கவிழ்ப்பு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 05.08.2019 – ஒரே நாளில் திட்டமிட்ட முறையில் அடுத்தடுத்த நகர்வுகளின் மூலம் இந்த அநீதி நடந்தேறி இருக்கிறது.
இதைப் புரிந்து கொள்வதற்கு முதலில் இந்திய அரசமைப்பில் காசுமீர் இணைந்த வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சி முறைமையின் சில கூறுகள் இருந்தாலும், அவை ஒற்றைத் தன்மையன அல்ல! அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 - சம்மு காசுமீருக்கு தனித்த சிறப்புத் தகுநிலையை வழங்குகிறது. உறுப்புகள் 371, 371A, 371B, 371C, 371D, 371E, 371F, 371G, 371H, 371I, 371J ஆகியவை பல்வேறு மாநிலங்களுக்கும் மாநிலத்தின் பகுதிகளுக்கும் சிறப்புத் தகுநிலை வழங்குபவை.
371 – மகாராட்டிரா குசராத் மாநிலங்களுக்கும், 371A - நாகாலாந்துக்கும், 371B - அசாமிற்கும், 371C – மணிப்பூருக்கும், 371D மற்றும் E – ஆந்திரப்பிரதேசத்தின் தெலங்கானா மாவட்டங்களுக்கும், 371F - சிக்கிமுக்கும், 371G – மிசோரத்திற்கும், 371H - அருணாச்சலப்பிரதேசத்திற்கும ், 371I - கோவாவிற்கும் சிறப்பு அதிகாரங்களை வழங்குகின்றன. 371J – ஐதராபாத் நிசாம் ஆட்சிப் பகுதியாக இருந்து, பின்னர் கர்நாடகத்தில் இணைக்கப்பட்ட பிதர், குல்பர்கா, யாதுகிரி, இராய்ப்பூர், கோபல், பெல்லாரி ஆகிய ஆறு மாவட்டங்கள் அடங்கிய கர்நாடக ஐதராபாத் மண்டலத்திற்கு சில சிறப்புரிமைகளை வழங்குகிறது.
அந்த வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் இணைக்கப்பட்டிருப்பது சம உறவில் அல்ல! வெவ்வேறு தனித்தன்மையுள்ள உறவு களோடு இந்திய ஒன்றியத்தில் “மாநிலங்கள்” இருக்கின்றன.
இவற்றுள் உறுப்பு 370 என்பது முற்றிலும் வேறானது! பிரித்தானிய ஆட்சியின் செல்வாக்குக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான மன்னராட்சிப் பகுதிகள் “சுதந்திரத்துக்குப்” பிறகு இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டாலும், இந்திய அரசமைப்புச் சட்டம் - 1950 சனவரி 26இல் செயலுக்கு வந்ததற்குப் பிறகு - இந்த மன்னராட்சிப் பகுதிகள் அனைத்தும் “மாநிலங்களாக” அல்லது “மாநிலங்களின் பகுதிகளாக” உள்வாங்கப் பட்டன. ஆனால், காசுமீர் நிலை வேறானது!
இந்திய அரசுக்கும் காசுமீர் அரசர் அரிசிங்கிற்கும் இடையில், 1947 அக்டோபர் 26-இல் கையெழுத்திடப் பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சம்மு காசுமீர் தனி உரிமைகளோடு இந்தியாவில் இணைக்கப்பட்டது. அந்த இணைப்பும் “தற்காலிகமானது” என அந்த ஒப்பந்தம் உறுதி கூறியது. சம்மு காசுமீர் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு (Plebiscite) நடத்தி அந்த இணைப்பு உறுதி செய்யப்பட்டால்தான் அது நிரந்தர நிலை பெறும்!
இந்தத் தற்காலிக இணைப்புக் காலத்தில், வெளியுறவு - பாதுகாப்பு - தகவல் தொடர்பு ஆகிய மூன்று அதிகாரங்கள் மட்டுமே சம்மு காசுமீரைப் பொறுத்து இந்திய ஒன்றிய அரசிடம் இருக்கும் என்றும், மற்ற பிற அதிகாரங்கள் அனைத்தும் சம்மு காசுமீரிடமே இருக்கும் என்றும் இணைப்பு ஒப்பந்தம் கூறியது.
காசுமீர் அரசர் அரிசிங்கின் திவானாக பதவி வகித்த கோபாலசாமி ஐயங்கார், அரசமைப்பு அவையில் உறுப்பினராக இருந்தார். அவர்தான் அரசமைப்புச் சட்ட உறுப்பு 370-ஐ (அன்றைக்கு 306 A) அரசமைப்பு அவையில் 1949 அக்டோபர் 17-இல் முன்வைத்துப் பேசினார்.
காசுமீரில் நிலவும் தனித்தன்மைகள் அப்பகுதியை தனி வகையாக கையாளும் தேவையை கோருவதாகக் கூறிய கோபாலசாமி ஐயங்கார், இந்திய அரசு காசுமீர் மக்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் அளித்துள்ள வாக்குறுதியின் அடிப்படையில் உறுப்பு 370 வழியாக சிறப்புத் தகுநிலை உறுதி செய்யப்படுவதாக விளக்கமளித்தார். இதனை ஆரியத்துவ சார்பாளர்களான பாபு இராசேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக் கொண்டனர். (காண்க : Constituent Assembly Debates, Volume X, பக்கங்கள் : 422 - 427).
1954 மே 14 அன்று பிறப்பிக்கப்பட்ட “அரசமைப்புச் சட்ட சம்மு காசுமீருக்கு பொருத்தப்படுத்தும் ஆணை - 1954” (Constitution (Application to Jammu and Kashmir) Order - 1954) என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு இடையே சேக் அப்துல்லாவை பணிய வைத்து உருவாக்கப்பட்ட நேரு - சேக் அப்துல்லா உடன்படிக்கையின் அடிப்படையில் வெளியானது ஆகும்.
இது உண்மையில் அரசமைப்புச் சட்டம் உருவான போது, உறுப்பு 370-இன்படி காசுமீருக்கு வழங்கப்பட்ட பல தனி உரிமைகளையும், அதிகாரங்களையும் பறிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும். ஆயினும், அந்த ஆணையின் வாயிலாக அரசமைப்புச் சட்டத்தில் 35A உறுப்பு சேர்க்கப்பட்டது.
உறுப்பு 370 உட்பிரிவு 2 மற்றும் 3-இன்படி, இந்தியக் குடியரசுத் தலைவர் காசுமீர் தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகளில் மாற்றமோ திருத்தமோ செய்ய வேண்டுமென்றால், சம்மு காசுமீர் அரசமைப்பு மன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும். அம்மன்றம் 1952-லிருந்து 1957 தொடக்கம் வரை செயலில் இருந்தது.
இச்சூழலில் சம்மு காசுமீரின் அன்றைய பிரதமர் சேக் அப்துல்லாவை பணிய வைத்து, அதன் வழியாக சம்மு காசுமீர் அரசமைப்பு மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் காரணமாக, இந்திய உச்ச நீதிமன்றம் - சம்மு காசுமீருக்கும் சேர்த்த உச்ச நீதிமன்றமாக அதிகாரம் பெற்றது. சம்மு காசுமீருக்கும் சேர்த்து அவசரநிலை பிறப்பிக்கும் அதிகாரத்தை இந்திய அரசு பெற்றது.
நேரு ஆட்சியின் மிரட்டலுக்குப் பணிந்து, சம்மு காசுமீர் பிரதமர் சேக் அப்துல்லா இந்திய அரசின் பல அதிகாரங்களை ஒப்புக் கொண்டாலும், நேரு அரசு கேட்ட பல்வேறு அதிகார அத்துமீறல்களுக்கு இணங்க மறுத்தார்.
எனவே, இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு திடீரென்று 1953 ஆகத்து 8ஆம் நாள் சம்மு காசுமீர் பிரதமர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அவரை நீக்குவதற்கு இந்திய அரசு சொன்ன காரணம், சேக் அப்துல்லா தனது அமைச்சரவையின் நம்பிக்கையை இழந்து விட்டார் என்பதுதான்!
சட்டப்படி அமைச்சர்களை அமர்த்தி அமைச்சரவையை நிறுவும் அதிகாரம் தலைமையமைச்சருக்குத்தான் உண்டு. அமைச்சரவையில் அமைச்சர்கள் பெரும்பாலோர் தலைமையமைச்சருக்கு ஒத்து வரவில்லையென்றால், அவர்களை நீக்கிவிட்டு புதிய அமைச்சர்களை அமர்த்திக் கொள்ள தலைமையமைச்சருக்கு அதிகாரம் உண்டு. எந்த சட்டத்திலும் அமைச்சரவையின் பெரும்பான்மையின் நம்பிக்கையை இழந்தார் என ஒரு தலைமையமைச்சரை நீக்க முடியாது.
இதனை சுட்டிக்காட்டிய சேக் அப்துல்லா, சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உடனடியாக தனது பெரும்பான்மையை மெய்ப்பிக்க அணியமாக இருப்பதாகச் சொன்னார். இந்திய அரசு அதனை ஏற்க மறுத்து, அடுத்த நாளே “காசுமீர் சதி வழக்கு” என்ற பொய் வழக்கைப் புனைந்து, சம்மு காசுமீர் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக குற்றம்சாட்டி சேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். இந்தப் பொய் வழக்கில் அவர் 11 ஆண்டுகள் சிறையில் வாடினார்.
சேக் அப்துல்லாவை கைது செய்த உடனேயே அவரது தேசிய மாநாட்டுக் கட்சியில் பட்சிகுலாம் முகமது என்ற ஆள்காட்டியை சம்மு காசுமீரின் தலைமையமைச்சராக ஆக்கியது இந்திய அரசு. தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவராக அவர் தன்னை அறிவித்துக் கொண்டார். இவை அனைத்தையும் அன்று சம்மு காசுமீரின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் கரண் சிங் மூலம் செய்து முடித்தது இந்திய அரசு. இந்த கரண் சிங் காசுமீர் அரசர் அரிசிங்கின் புதல்வர் ஆவார். நேருவுக்கு நெருக்கமான காங்கிரசுத் தலைவர்களில் கரண் சிங்கும் ஒருவர்.
எட்டப்பன் பட்சிகுலாமைப் பயன்படுத்தி, உறுப்பு 370இன் தனித்த செயல்பாட்டையே அரிக்கும் வகையில் 47 குடியரசுத் தலைவர் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இதற்கு அளிக்கப்படும் கடைசி சலுகையாக 35A - காசுமீருக்கு வழங்கப்பட்டது.
சம்மு காசுமீரில் 1954 மே 14க்கு முன்புவரை அம்மாநிலத்தில் வாழ்ந்த மக்கள் “நிரந்தர வாசிகள்” (Permanent Residents) என்று வரையறுக்கப்பட்டது. இவ்வாறான நிரந்தரவாசிகளும், அவர்களின் வாரிசுகளும்தான், சம்மு காசுமீரில் நிலம் - மனை போன்ற அசையா சொத்துகளை வாங்கி விற்க முடியும். இவர்கள்தான் அம்மாநில அரசுப் பணிகளில் வேலை வாய்ப்புப் பெற முடியும். இவர்கள்தான் சம்மு காசுமீரில் நிரந்தரமாகக் குடியிருக்க முடியும். அரசின் கல்வி உதவித் தொகையும் இவர்கள்தான் பெற முடியும். இதுவே உறுப்பு 35A காசுமீரிகளுக்கு உறுதி செய்துதரும் தனி உரிமைகளாகும்.
தனி ஆணையின் மூலம் 35A உறுப்பை அரசமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதற்கு இந்தியக் குடியரசுத் தலைவ ருக்கு அதாவது இந்திய அமைச்சரவைக்கு உறுப்பு 370 அதிகாரமளித்தது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான வழிமுறைகள் உறுப்பு 368இல் கூறப்பட்டுள்ளன. அதன்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வந்திருந்து வாக்களிப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவும், மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவும் பெற்று மொத்த மாநிலங்களில் ஐம்பது விழுக்காட்டிற்குக் குறையாத மாநில சட்டமன்றங்களின் ஆதரவும் இருந்தால், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தலாம். ஆனால், இது சம்மு காசுமீர் தவிர பிற மாநிலங்களுக்குத்தான்!
அரசமைப்புச் சட்ட உறுப்பு 370-ஐ நீக்குவது, மாற்று வது, திருத்துவது என்ற எதற்கும் சம்மு காசுமீர் அரசமைப்பு மன்றத்தின் முன் ஒப்புதல் தேவை! இந்த வகையில், அரசமைப்புச் சட்ட உறுப்பு 368-க்கு சம அதிகாரம் உள்ளதாக 370 திகழ்கிறது.
இந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டால்தான், 05.08.2019 அன்று மோடி – அமித்சா கும்பல் நாடாளுமன்றத்தின் வழியாக நிகழ்த்திய சட்டக் கவிழ்ப்பைப் புரிந்து கொள்ள முடியும்!
ஒரே நாளில் மூன்று கட்டங்களாக இந்த சட்டக் கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டது. முதலில், 05.08.2019 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவை கூடுவதற்கு முன்னால் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ நேரடியாக நீக்குவதற்குப் பதிலாக, அவ்வுறுப்பைப் பயன்படுத்தியே அதை செயலற்றதாக மாற்றுவதற்கு குடியரசுத் தலைவரின் ஆணை (C.O. 272) வெளியிடப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக, இந்த ஆணையின் மூலம் பெறப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி உறுப்பு 370-இல் கூறப்பட்டுள்ள சிறப்பு அதிகார உட்பிரிவுகளை நீக்குவதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது.
மூன்றாவது கட்டக் கவிழ்ப்பு நகர்வாக, சம்மு காசுமீர் மாநிலத்தை இரண்டாகப் பிளந்து லடாக் பகுதியை சட்டமன்றம் இல்லாத ஒன்றிய ஆட்சிப் பகுதியாகவும், சம்மு காசுமீர் பகுதியை சட்டமன்றத்தோடு கூடிய ஒன்றிய ஆட்சிப் பகுதியாகவும் மாற்றி “மாநிலம்” என்ற நிலை துடைக்கப்பட்டது.
நாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி 370 (3) – “சம்மு காசுமீர் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் எந்த ஆணைக்கும் சம்மு காசுமீரின் அரசமைப்பு அவையின் பரிந்துரை கட்டாயம் தேவை ஆகும்”. இந்த “முட்டுக்கட்டையை” உடைப்பதற்கு 370 (1)-ஐ மேற்சொன்ன குடியரசுத் தலைவரின் ஆணை (C.O. 272) பயன்படுத்துகிறது. ஆனால், இதை நேரடியாக சட்டப்படி செய்ய முடியாது.
இதற்கு அரசமைப்பு உறுப்பு 367-ஐ மிகக் கேடான வகையில் பயன்படுத்திக் கொள்கிறது. உறுப்பு 367 என்பது, அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு தெளிவு மற்றும் விளக்கம் குறித்து விளக்கும் உறுப்பு ஆகும். அந்தப் பிரிவு 367இல் ஏற்கெனவே மூன்று உட்பிரிவுகள் இருக்கின்றன.
குடியரசுத் தலைவரின் ஆணை ஒரு அவசரச் சட்டம் போல் (Ordinance) 367-இல் 367 (4) என்ற புதிய உட்பிரிவை சேர்க்கிறது.
இதில் குறிப்பாக, 367(4)(b) – உறுப்பு 370இல் சம்மு காசுமீரின் பிரதம அமைச்சர் (Sadar - I Riyasat) என்று வரும் இடங்களிலெல்லாம் “ஆளுநர்” என்று விளங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
367(4)(c) – சம்மு காசுமீர் அரசாங்கம் என்பது ஆளுநரைக் குறிக்கும். ஆளுநர் அம்மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடந்து கொள்வார் என்று கூறுகிறது.
367(4)(d) – எங்கெல்லாம் சம்மு காசுமீர் அரசமைப்பு அவை என்று வருகிறதோ, அங்கெல்லாம் அம்மாநிலத்தின் சட்டமன்றம் எனப் பொருள் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது.
யானை விளாம்பழத்தை உண்பது போல 370 அப்படியே இருக்க, 370-ஐ செயலற்றதாக மாற்றுவதற்கு வழி செய்யப்பட்டுவிட்டது! யானை விளாம்பழத்தை ஓட்டோடு விழுங்கும். அதை உண்டு செறித்தப் பிறகு அதன் மலத்தில் மீண்டும் ஓட்டோடு விளாம்பழம் விழும். உடைத்துப் பார்த்தால் ஓடு மட்டும் இருக்கும். உள்ளே இருக்கும் சுளை எல்லாம் செறிக்கப்பட்டிருக்கும்! இதைத்தான், “தோலிருக்க சுளை விழுங்கி” என்பார்கள்.
இவ்வாறு 370 என்ற தோல் இருக்க, அதன் சாரம் மட்டும் உறிஞ்சப்பட்டுவிட்டது! அதற்கு 367இல் செய்யப்பட்ட இந்த சேர்க்கை கொல்லைப்புற வழியாக கொள்ளப்படுகிறது.
ஆனால், இந்தப் புதிய 367(4)(c) சொல்லக்கூடிய ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் அமைச்சரவை இப்போது சம்மு காசுமீர் மாநிலத்தில் இல்லை. அங்கு ஆளுநர் ஆட்சி நடைபெறுகிறது. இப்போது சேர்க்கப்பட்டிருக்கிற 367(4)(d) கூறுவதுபோல் சம்மு காசுமீரில் சட்டமன்றம் இல்லை. அது கலைக்கப்பட்டுவிட்டது.
ஆனால், அரசமைப்பு உறுப்பு 356இன் கீழ் மாநில ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும்போது அம்மாநிலத்தில் சட்டமியற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றம் பெற்றுக் கொள்கிறது. அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் அமைச்சரவையின் முடிவுப்படி குடியரசுத் தலைவர் மூலம் நிகழும்.
காசுமீரின் ஆள்காட்டிகளான மெகபூபா அமைச்சரவையாக இருந்தாலும் உமர் அப்துல்லா அமைச்சரவை இருந்தாலும் 370-ஐ செயலற்றதாக ஆக்குவதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்கள். எவ்வளவு பொம்மைக் கட்சிகளை வைத்து அமைத்தாலும் சம்மு காசுமீர் சட்டமன்றம் 370 –ஐ செயலற்றதாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியாது.
ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஒரு மாநிலத்தில் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவது ஒரு தற்காலிக ஏற்பாடாகும். அம்மாநிலத்தின் இருப்பையே அழிக்கும் சட்டத் திருத்தத்தை அம்மாநில சட்டமன்றம் இல்லாதபோது செய்வது சட்டக்கவிழ்ப்பாகும்!
இதுபோன்றதொரு சிக்கல் பீகாரில் எழுந்தபோது, பாட்னா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் டி.சி. வாத்வா என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில் பி.என். பகவதி தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் வழங்கியத் தீர்ப்பு கவனங்கொள்ளத்தக்கது (1987 AIR 579).
“சட்டமன்றத்தின் நேரடி ஒப்புதலோடு செய்ய முடியாத ஒரு செயலை சட்டமன்றம் கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி இருக்கும்போது செய்வது அரசமைப்புச் சட்ட மோசடியாகும் (Fraud on Constitution). நேரடியாக செய்ய முடியாததை சுற்றி வளைத்து செய்வது சட்ட நெறிமுறை ஆகாது” என்று தீர்ப்புரைத்தது.
இன்னொருபுறம், “இந்திய ஸ்டேட் வங்கி எதிர் சந்தோஷ் குப்தா” என்ற வழக்கில், 2016 திசம்பர் 16 அன்று நீதிபதிகள் குரியன் சோசப் மற்றும் ரொகிண்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமது தீர்ப்பில் 370 மற்றும் 35A ஆகியவை அரசமைப்பின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகும் எனக் கூறியது.
இதற்கு 1970ஆம் ஆண்டு “சம்பத் பிரகாஷ் எதிர் சம்மு காசுமீர் மாநில அரசு” என்ற வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் வழங்கிய தீர்ப்பை (1970 AIR 1118) மேற்கோளாக எடுத்துக் கூறியது. இத்தீர்ப்பின்படி, அரசமைப்பு உறுப்பு 370 மற்றும் 35A ஆகியவை தற்காலிகமானவை அல்ல நிரந்தரமானவை ஆகும். இதன் அடிப்படையில் கேசவானந்த பாரதி வழக்குத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது போல் அரசமைப்பு உறுப்பு 370 மற்றும் 35A ஆகியவை அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக் கூறுகளில் ஒன்றாகி விட்டன என்று முடிவுக்கு வந்ததாக நீதிபதிகள் குரியன் சோசப் - ரொகிண்டன் பாலி நாரிமன் அமர்வு விளக்கமளித்தது.
இதுமட்டுமல்ல, 370 (c) – இச்சிக்கலில் மிக முக்கியமானதாகும். 370 (c) வழியாகத்தான் இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக அரசமைப்புச் சட்டத்தில் சம்மு காசுமீர் மாநிலம் இணைக்கப்படுகிறது. “இந்த அரசமைப்புச் சட்டத்தில் யாது கூறப்பட்டிருப்பினும் உறுப்பு 1 மற்றும் இந்த உறுப்பு (this article) இந்த மாநிலத்திற்கு கட்டாயம் செல்லுபடியாகும்” (370 (1)(c) – Not withstanding anything contained in this constitution , the provisions of Article 1 and this article shall apply to the state) என்று கூறுகிறது.
இதில் கூறப்பட்டுள்ள உறுப்பு 1 என்பது இந்தியாவின் ஆட்சிப் பகுதிகளைக் குறிப்பதாகும். இப்பிரிவின்படி இந்தியாவின் ஆட்சிப்பகுதியாக சம்மு காசுமீர் சேர்க்கப்படுகிறது. இப்பிரிவின் அடுத்த பகுதி கூறுவதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.
“இந்த உறுப்பு” – அதாவது உறுப்பு 370 – இந்திய அரசமைப்புச் சட்டத்தில் யாது கூறப்பட்டிருப்பினும் நீடித்து நிற்கும் என்பதை உறுதிபடக் கூறுகிறது.
இந்நிலையில், 367இல் ஒரு புதிய விளக்கப் பிரிவை சேர்த்து எல்லா அதிகாரமும் ஆளுநருக்கு வழங்கப்பட்டதைப் போல் மோசடியாக சொல்லிக் கொண்டு 370-ஐ செயலற்றதாக ஆக்கும். நாடாளுமன்றத்தின் முடிவு அப்பட்டமான சட்டக் கவிழ்ப்பாகும்! அதுவும், 367(4)(c)-இல் இப்போது புதிதாக சொல்லப்பட்டுள்ள சட்டமன்றத்தின் ஒப்புதலைக்கூட பெறாமல் செய்வது அப்பட்டமான சட்டமீறலாகும்.
ஏனெனில், ஆளுநர் என்பவர் அரசமைப்புச் சட்டப்படி இந்திய ஒன்றிய அரசின் முகவர் ஆவார். அதாவது, குடியரசுத் தலைவரின் முகவர் ஆவார். அரசமைப்புச் சட்டப்படி ஒரு மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு அம்மாநிலத்தின் அனைத்து ஆட்சி நடைமுறைகளும் ஆளுநர் வழியாக நடப்பது ஒரு தற்காலிகமான ஏற்பாடு!
அவ்வாறான தற்காலிகமான சூழலில் அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்புரிமைகள் அனைத்தையும் செல்லாததாக்கும் அடிப்படை முடிவெடுப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. சட்டமன்றத்திற்குப் பதிலாக ஆளுநரின் ஒப்புதல் பெறுவது சட்டமன்றத்தின் ஒப்புதல் பெற்றதற்கு நிகர் ஆகாது!
இந்த சட்டக் கவிழ்ப்பை மிக அவசர அவசரமாக – கோப்புக் கைக்குக் கிடைத்த மறு நிமிடமே குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டு சட்ட அறிவிப்பாக (C.O. 273) 2019 ஆகத்து 6 அன்று அறிவித்திருப்பது மிகக் கேவலமானது!
இந்திராகாந்தி அவசரநிலை பிறப்பித்தபோது, குளியலறையில் இருந்தவாறே அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமத் கோப்பில் கையெழுத்திட்டார் என்று சொல்லப்படுவதுண்டு. அதைவிடக் கீழானது இராம்நாத் கோவிந்தின் நடவடிக்கை!
குடியரசுத் தலைவரின் CO 273 அறிவிக்கை அரசமைப்பு உறுப்பு 370 (3)இன் கீழ் வெளியிடப்படும் பிரகடனம் என்று கூறிக் கொள்கிறது.
இந்தப் பிரகடனத்தின் வழியாக “இதுவரை இருந்த உறுப்பு 370 இனி செயல்படாது – மாறாக, 370 கீழ்வருமாறு மாற்றியமைக்கப்படுகிறது” என்று இப்பிரகடனம் கூறுகிறது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட புதிய பிரிவு 370 முன் தேதியிட்டு அமலாகும் பொருள்படும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
“அரசமைப்புச் சட்ட உறுப்பின் 152 அல்லது 308 அல்லது வேறு அரசமைப்ப உறுப்புகளோ, அல்லது சம்மு காசுமீரின் சட்டமன்றமோ அல்லது வேறு சட்டங்களோ, ஆவணங்களோ, நீதிமன்றத் தீர்ப்புகளோ, அவசரச்சட்டங்களோ, ஆணைகளோ, வேறு நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களோ இதற்கு மாறாக இருக்குமானால் செல்லுபடியாகாது” என்று குடியரசுத் தலைவரின் அறிவிக்கை கூறிக் கொள்கிறது. இவ்வாறு இதற்கு முன்னர் எந்த சட்டமும் அறிவிக்கப்பட்டதில்லை!
சிங்கள அரசோடு இந்திய அரசு இணைந்து எந்தப் பன்னாட்டு சட்டங்களையும் பற்றி கவலைப்படாமல் கொத்துக் குண்டுகளை வீசி ஈழத்தமிழினத்தை அழித்து தமிழீழத் தாயகத்தை சுடுகாடாக்கியது.
இப்போது, ஏற்கெனவே அங்கு நிலைகொண்டுள்ள 5 இலட்சம் படையினருக்கு மேல் காசுமீரத்துக்குள் கூடுதலாக மேலும் ஒன்றரை இலட்சம் படையினர் மற்றும் துணைப் படையினரை அனுப்பி அரசியல் செயல்பாட்டாளர்களை ஆயிரக்கணக்கில் கைது செய்து சிறையில் அடைத்து ஊரடங்கு பிறப்பித்து தூர்தசன் தவிர பிற தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டு, முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டு வெளிநாட்டு மற்றும் வெளி மாநிலச் செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டு “சாட்சியற்றப் போர்” – காசுமீர் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளத ு.
இந்த அழுத்தத்தைப் பயன்படுத்தி, ஒரு அசாதாரண சூழ்நிலையில் அவர்கள் நடப்பது என்ன என உணர்வதற்கு முன்னாலேயே காசுமீரிகளின் தாயகம் சிதைக்கப்பட்டு விட்டது. அமைதியான அந்த மக்களின் தனித்த அடையாளம் பறிக்கப்பட்டுவிட்டது.
அடுத்து வரும் அக்டோபரில் சம்மு காசுமீருக்கான முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று மோடி அறிவித்திருக்கிறார். அதானியாலும், அம்பானியாலும் அந்த மண் வேட்டையாடப்பட போகிறது! இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேறிய நாளிலேயே முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமும் சம்மு காசுமீருக்கு செல்லும் என்ற தனிச்சட்டம் நிறைவேறியுள்ளது.
அங்கு அனைத்திந்திய போட்டித் தேர்வுகளின் வழியாக இந்தி மாநிலத்தைச் சேர்ந்த முன்னேறிய சாதியினர் முக்கிய நிறுவனங்களில் புகுத்தப்படப் போகிறார்கள். தொகை தொகையாக துப்பாக்கிகளின் பாதுகாப்போடு இந்தி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குவிக்கப்பட்டு, விரைவில் அவர்களுக்கும் வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிடும். சம்மு காசுமீர் தாயகத்திலேயே அத்தேசிய இன மக்கள் விரைவில் சிறுபான்மையினர் ஆக்கப்படுவார்கள். இவையெல்லாம், தில்லி ஆட்சியாளர்களின் திட்டங்கள்!
ஆனால், காசுமீரிகள் 1948லிருந்தே தங்கள் தாயக உரிமைக்காக நீண்ட நெடிய போராட்டத்தில் அடுத்தடுத்த தலைமுறையினரையும் அயராமல் ஈடுபடுத்தி வருகிறவர்கள் ஆவர். அவர்களது போராட்டம் காரணமாகவும் பாக்கித்தானின் தலையீடு காரணமாகவும் காசுமீர் சிக்கலென்பது ஏற்கெனவே பன்னாட்டுச் சிக்கலாக மாறிவிட்டது. அது இன்னும் தீவிரப்படும்.
இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல மக்களிடம் திரட்டும் வரியை அங்கே கொட்டி - தமிழ்நாடு உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலிருந்தும் படையாட்களை அங்கே குவித்து நிரந்தர இராணுவ ஆட்சிப் பகுதியாக சம்மு காசுமீரை இந்திய அரசு மாற்றி வருகிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி காசுமீரிகளின் தாயகப் பறிப்பிற்கான போரில் அநீதியான முறையில் குவிக்கப்படும். இன்று விவரம் புரியாமல், மோடி ஆட்சியின் அநீதியான இந்நடவடிக்கையை ஆதரிக்கும் மக்கள் கூட இதன் விளைவுகளை நாளைக்கு சந்திக்க நேரிடும்.
ஒரு அரசு, தனது காலனியாகப் பிடித்த ஒரு பகுதியில் அதீதமான அளவில் இராணுவத்தைக் குவிக்கும்போது மற்ற பகுதிகளில் மக்களின் சனநாயக உரிமைகளைப் பறிப்பது தவிர்க்க முடியாததாகும்! இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், என்.ஐ.ஏ. சட்டமும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமும் புதிய அதிகாரங்கள் பெற்றிருப்பது இதை விளக்கும்!
காசுமீரிகளின் தாயக உரிமைப் போராட்டத்தில் தமிழர்கள் துணை நிற்க வேண்டியது அம்மக்களுக்காக மட்டுமல்ல – நமது உரிமையை பாதுகாத்துக் கொள்ளவும்தான்! காசுமீரில் இன்று நடந்தது நாளை தமிழ்நாட்டில் நடக்காது என உறுதிகூற முடியாது!
ஏனெனில், ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ். மொழிவழி – தேசிய இனவழித் தாயக மாநிலங்களே இருக்கக் கூடாது, மாறாக இந்தியா முழுவதும் நிர்வாக அலகு மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடையது.
ஆரியமயமான பிற தேசிய இனங்கள் – சமற்கிருதமயமான பிற மொழிகள் இந்திய ஆதிக்கத்தை இயல்பாக எடுத்துக் கொள்ளக்கூடியவை. அதிலும் குறிப்பாக, இந்தி பேசும் வடமாநில மக்களில் ஏழைகள் கூட இந்தியாவின் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் தங்களுக்கான பேரரசின் நடவடிக்கைகள் எனப் பெருமிதம் அடைகிறார்கள். அதுவும் ஆரிய வளையத்திற்கு வெளியே இருக்கிற தமிழ் மொழியும், தமிழ் இனமும் அவர்களது தாயகமும் தாக்கப்படுமானால் இந்தி மக்கள் அதைத் தங்களுக்கான வெற்றியாகவே கொண்டாடுவார்கள். இது அவர்களின் இயல்பான சமூக உளவியல்! இதுதான் ஆரியத்துவ ஆதிக்கவாதிகளுக்கு மிகப்பெரும் மக்கள் ஆதரவை அளிக்கிறது.
இன்று காசுமீரில் கட்டமைப்பு இன அழிப்பை இந்தியாவிலுள்ள பிற இனத்தவர் குறிப்பாக இந்தி இனத்தவர் ஆதரிப்பது, நேற்று தமிழீழ இன அழிப்பின்போது நிகழ்ந்ததுதான்! நாளை தமிழினத்திற்கு எதிராக இந்திய அரசு எதைச் செய்தாலும் இதேநிலையில்தான் இந்தி இனத்தவர் நடந்து கொள்வார்கள்.
இவற்றை எதிர்கொள்ள தி.மு.க. – அண்ணா தி.மு.க. போன்ற கங்காணி அரசியல் கட்சிகளால் முடியவே முடியாது! காசுமீரத்தில் மெகபூபாக்கள் – பருக் அப்துல்லாக்கள் துணையோடுதான் தில்லி ஆட்சியாளர்களின் இந்தத் தாயகப் பறிப்பு நடந்தேறியது என்பதை தமிழ்நாட்டு மக்கள் படிப்பினையாகக் கொண்டு, தங்கள் தாயகப் பாதுகாப்பிற்கான புதிய அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும்.
அந்தப் பாதை தமிழ்த்தேசியம் ஆகும்!
0 கருத்துகள்:
Post a Comment