கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

" மரபீனி மாற்றக் கடுகு : “பாரத மாதா”வின் பெயரால் அடிமையாக்கும் வியாபாரம்!"----- தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்


 மரபீனி மாற்றக் கடுகு :

“பாரத மாதா”வின் பெயரால்
அடிமையாக்கும் வியாபாரம்!
========================
தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
========================

மரபீனி மாற்றக் கடுகிற்கு இந்திய அரசின் உயர்மட்ட ஆய்வுக்குழு இசைவு அளித்திருப்பதன் வாயிலாக இந்தியாவில் அடுத்தடுத்து மரபீனி மாற்ற உணவுப் பயிர்களுக்கு இந்தியச் சந்தையில் வழி திறந்துவிடப் பட்டிருக்கிறது.

தாரா கலப்பினக் கடுகு (Dhara Mustard Hybrid - DMH 11) என்ற பெயரிலான மரபீனி மாற்றக் கடுகை தில்லி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் தீபக் பெண்டால் (Deepak Pental) முன்வைத்திருக்கிறார்.

கடந்த 2017 மே மாதத்திலேயே இந்திய அரசின் மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழு (Genetic Engineering Approval Committee) இந்த தாரா கலப்பினக் கடுகுக்கு ஏற்பு வழங்கினாலும் உச்ச நீதிமன்றத்தில் இச்சிக்கல் குறித்து நடந்துவரும் வழக்கை ஒட்டி இந்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் இதற்கு ஏற்பு வழங்காமல் நிறுத்தி வைத்தது.

இதே டிஎம்எச் - 11 என்ற மரபீனி மாற்றக் கடுகிற்கு 2002 ஆம் ஆண்டு செர்மனி நாட்டின் பன்னாட்டு வேளாண் வேதிப்பொருள் நிறுவனமான பாயர் (Bayer) அனுமதி கேட்டபோது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian Council for Agriculture Research) அனுமதி மறுத்தது.

சந்தையில் புழக்கத்தில் உள்ள கடுகு விதைகளைவிட பாயரின் டிஎம்எச் 11 கடுகு விதை அதிக விளைச்சல் தரும் என்பதற்கோ, இதை உண்ணும் மனிதர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படாது என்பதற்கோ பாயர் நிறுவனம் எந்தத் தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை என்பதுதான் இந்த டிஎம்எச் 11 கடுகை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நிராகரித்ததற்கான காரணம் ஆகும்.

ஆனால் இதே தாரா கலப்பினக் கடுகை தீபக் பெண்டால் தன்னுடைய சொந்தக் கண்டுபிடிப்பு போல பஞ்சாப் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் வழியாக முன்வைத்தபோதே இந்த ஆய்வின் நம்பகத்தன்மை குறித்தும், இந்தக் கலப்பினக் கடுகு குறித்தும் ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அதற்கு முன்பாகவே பி.ட்டி. பருத்தி குறித்து தீவிரமாக எழுந்த விவாதங்களை ஒட்டி பல்வேறு வல்லுநர்கள் மரபீனி மாற்றத் தொழில்நுட்பம் குறித்தும், மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்தும் வலுவான அறிவியல் வழிப்பட்ட வினாக்களை முன்வைத்து இவற்றை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்குகளில் சுற்றுச் சூழல் அறிவியலாளர் அருணா ரோட்ரிக் அம்மையார் (Aruna Rodrigue) முன்வைத்த வழக்கு வலுவானது.

உச்சநீதிமன்றம் மரபீனி மாற்றத் தொழில்நுட்பம் குறித்தும், மரபீனி மாற்றப் பயிர்களின் தன்மைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்ய உயர்மட்ட வல்லுநர் குழு ஒன்றை அமர்த்தியது.

அக்குழு 2013 இல் தனது ஆய்வறிக்கையை உச்சநீதிமன்றத்துக்கு அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் “மரபீனி மாற்ற விதைகளை இந்தியச் சந்தையிலோ, ஆய்வு வயல்களிலோ அனுமதிக்கக் கூடாது” என் இடைக் காலத் தடை விதித்தது.

இந்தப் பின்னணியில் டிஎம்எச் - 11 கலப்பினக் கடுகை சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை யோடு தீபக் பெண்டால் முன்வைத்தபோது மரபீனிப் பெறியியல் குழு அனுமதி அளித்தாலும் இந்திய அரசு அதனை ஏற்காமல் நிறுத்தி வைத்தது.

இப்போது இதே தாரா கலப்பினக் கடுகுக்கு கடந்த 26.10.2022 அன்று மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழு அனுமதி அளிப்பதென்று முடிவெடுத்து விட்டது. ஆயினும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்பு வழங்கினால் தான் சந்தையில் அனுமதிக்கப்படும்.

ஆனால், தாரா கலப்பினக் கடுகு இந்த இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் பல்வேறு ஆய்வுத் துணைக்குழுக்களை கடந்து வந்திருப்பதே மோடி அரசின் அரசியல் இசைவோடுதான் என்ற ஐயம் எழுகிறது.

இந்தத் தாரா கலப்பினக் கடுகு களைக்கொல்லி தாங்கும் வகையினம் (Herbiside tolerent variety) ஆகும். அதாவது, இந்தக் கலப்பினக் கடுகைச் சுற்றி வளரும் களைகள் வழமையான களைக் கொல்லிகளால் சாகாது. பாயர் கம்பெனியின் குளுஃபோசினேட் (Glufosinate) என்ற உயர் நச்சுக் களைக் கொல்லியைப் பயன் படுத்தினால்தான் இந்தக் கலப்பினக் கடுகைச் சுற்றி வளரும் களைகள் சாகும்.

மற்ற மரபான கடுகுகளைவிட இந்தத் தாரா கலப்பினக் கடுகு 25 விழுக்காடு கூடுதல் விளைச்சல் தரும் என்று தீபக் பெண்டால் மார்தட்டுவது முற்றிலும் பொய்யானது என பல்வேறு கள ஆய்வுகளை ஆதாரம் காட்டி அருணா ரோட்ரிக் உறுதியான மறுப்பை மரபீனி பொறியியல் குழுவிடம் 2017லேயே அளித்தார்.

தீபக் பெண்டாலிடமிருந்து இப்போதும்கூட அதற்கு தெளிவான மறுப்பதும் இல்லை.

இதன் நம்பகத்தன்மையைத் தற்சார்பாக ஆய்வு செய்திருக்க வேண்டிய மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழு தீபக் பெண்டாலிடமே இது குறித்து ஆயுவுக்குழுவை அமர்த்தி அறிக்கை தருமாறு கேட்டது. இதுவே இதன் மோசடித்தன்மைக்கு சான்று கூறும்.

இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறை (Department of Bio-technology)யின் தலைவர் சஞ்சய்குமார் மிஸ்ரா தலைமையில் ஆய்வுக்குழுவை அமர்த்திக் கொண்டார் தீபக் பெண்டால். இதுவே மோசடியான உள்நோக்கம் கொண்டதாகும். ஏனெனில், இந்த உயிரித் தொழில்நுட்பத் துறையே மரபீனி மாற்றத் தொழில் நுட்பத்தையும், மரபீனி மாற்றப் பயிர்களையும் விரிவாக்கும் நோக்கமுள்ள துறையாகும்.

இந்த மிஸ்ரா குழுவும்கூட 2013, 2017இல் எழுப்பப்பட்ட எந்த வினாவிற்கும் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. பாயர் கம்பெனியின் விளம்பரத் துண்டறிக்கைகள் தங்கள் களைக் கொல்லியைப் பயன்படுத்தினால் உச்ச அளவு விளைச்சல் கிடைக்கும் என்று ஒரு உயர் அளவைக் குறிப்பிடுவதுபோல் தீபக் பெண்டால் முன்வைத்தார். மிஸ்ரா குழுவும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டது.

எப்போதுமே இவ்வாறான அறிவியல் சோதனைகளில் உச்ச அளவையோ, அல்லது கீழ் அளவையோ எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சராசரி விளைச்சல் அளவைத்தான் (Mean Seed Yield) கணக்கில் கொள்வார்கள். ஆனால் தீபக் பெண்டாலும், சஞ்சய்குமார் மிஸ்ராவும் பல்வேறு சோதனைகளில் எது உச்ச அளவு விதை விளைச்சலோ அதையே கணக்கில் கொண்டு முடிவுகளை வெளியிட்டார்கள். இது ஆய்வு முறைக்குப் புறம்பான தெரிந்தே செய்யும் மோசடியாகும்.

இந்தக் கலப்பினக் கடுகு மட்டுமின்றி, மரபீனி மாற்றப் பயிர்கள் அனைத்துமே கூடுதல் உரம், கூடுதல் பூச்சிக் கொல்லி, கூடுதல் களைக் கொல்லி ஆகியவற்றைச் சார்ந்திருப்பவை. அதுவும் குறிப்பிட்ட நிறுவனத்தின் குறிப்பிட்ட இடுபொருட்களை மட்டுமே சார்ந் திருப்பவை. அது மட்டுமின்றி, ஒருமுறை போட்டதை விட அடுத்த போகத்திற்கு கூடுதல் உரம், கூடுதல் நச்சுக் கொல்லி என உயர்ந்து கொண்டே இருக்கும்.

ஏனெனில், மரபீனி மாற்றப் பயிர்களுக்கு இடப்படும் களைக்கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லி ஆகியவற்றை உண்டு அடுத்தடுத்த தலைமுறை பூச்சிகளும் களைகளும் கூடுதல் தாங்குதிறனோடு வளர்ந்துவிடுகின்றன என்பதை பல நூற்றுக்கணக்கான ஆய்வுகள் உறுதி செய்துவிட்டன.

இவ்வாறு மேலும் மேலும் கூடுதலாக இரசாயனத்தைக் கொட்டுவதால் நிலமும், நீரும், காற்றும், பயிர்களும் நஞ்சாகிப் போகின்றன.

இதுமட்டுமின்றி டிஎம்எச் - 11 கடுகு விளைந்துள்ள வயலில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள வயல்களிலும் தேனீக்களும் பட்டாம் பூச்சிகளும் வருவதில்லை. எனவே, இயல்பான வேறு பயிர்கள் சாகுபடி செய்திருக்கிற உழவர்களுக்கும் விளைச்சல் குறைகிறது.

தாரா கலப்பினக் கடுகு கொடுத்து சோதனை செய்த எலிகளுக்கும் முயல்களுக்கும் கொடிய நரம்பியல் நோய்கள் தாக்குவதை ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன. இந்த ஆய்வு முடிவுகளை மறுப்பதற்கு எந்த ஆதாரத்தையும் தீபக் பெண்டால் முன்வைக்காதபோது மரபீனிப் பொறியியல் குழு எவ்வாறு ஏற்பிசைவு வழங்கியது என்பதே மிகப்பெரிய கேள்வியாக எழுகிறது.

பசுமைப் புரட்சி என்ற பெயரால் வேதியியல் வேளாண்மையையும், நீடித்த பசுமைப் புரட்சி என்ற பெயரால் மரபீனி மாற்றப் பயிர்களையும் முன்வைத்த பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனின் ஆய்வுக்குழுவே பொதுவாக மரபீனி மாற்றத் தொழில்நுட்பம் குறித்தும் - குறிப்பாக தாரா கலப்பினக் கடுகு குறித்து - முன்வைத்துள்ள திறனாய்வுகள் கவனம் கொள்ளத் தக்கவை.

டிஎம்எச் - 11 மற்ற கடுகு வகையினங்களைவிடக் கூடுதல் விளைச்சல் தரக்கூடியது எனக் கூறிக் கொள்வதற்கு சொல்லப்பட்ட ஒப்பீடுகளே மோசடி யானது என்பதை எம்.எஸ். சுவாமிநாதன் குழு கூறுகிறது.

”வயல்வெளிச் சோதனையில் டிஎம்எச் - 11 கடுகும் அதற்கு இணையான மரபீனி மாற்றம் செய்யப்படாத பிற கடுகு இனங்களும் ஒப்பீட்டு ஆய்வுக்கு உட் படுத்தப்படவில்லை. ஏனென்றால், மரபீனி மாற்றம் செய்யப்படாத வகையினமான டிஎம்எச் - 1 கடுகை மரபீனி மாற்றம் செய்யப்பட்ட வகையினமான டிஎம்எச் - 11 என்ற தாரா கலப்பினக் கடுகோடு ஒப்பீட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, தீபக் பெண்டலின் டிஎம்எச் - 11ஐ விட மரபான டிஎம்எச் - 1 கடுகு இனம் கூடுதல் விளைச்சல் தந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக அடுத்தடுத்த ஒப்பீட்டாய்வில் டிஎம்எச் - 1 என்ற மரபான கடுகினம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அது மட்டுமின்றி, கிராந்தி (Kranthi), டிஎம்எச் - 4 போன்ற பிற கடுகினங்கள் கூட ஒப்பீட்டாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதுமட்டுமின்றி, மரபான கடுகினங்களின் விளைச்சலை கணக்கில் கொள்ளும்போது, ஐம்பது வெவ்வேறு சோதனை வயல்களில் ஐந்தாண்டுகளுக்கான விளைச்சல் கணக்கில் கொள்ளப்பட்டது. ஆனால் அதே நேரம் டிஎம்எச் - 11 மரபீனி மாற்றக் கடுகுக்கு மட்டும் ஆறு சோதனை வயல்களில் மூன்றாண்டுகளுக்கான விளைச்சல் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. அதாவது, ஆய்வுக் குழு வேண்டுமென்றே மரபீனி மாற்றக் கடுகுக்கு கடுமையான சோதனைகளிலிருந்து விலக்களித்துவிட்டது.

ஏற்கெனவே களைக்கொல்லி தாங்கும் (Herbiside Tolerent) மரபீனி மாற்ற சோளம், சோயா, பருத்தி ஆகியவை அவற்றை உட்கொண்ட பாலூட்டிகளுக்கு புற்றுநோய், குறை உறுப்புப் பிறப்பு, மலட்டுத்தன்மை ஆகியவற்றை உருவாக்குவது ஐயத்துக்கு இடமின்றி மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வகை மரபீனி மாற்றப் பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் கிளைஃபோசேட் (Glyphosate) களைக்கொல்லி இவ்வாறான நோய்களை தீவிரப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரபீனி மாற்றக் கடுகிற்கு பயன்படுத்தப்படும் குளுஃபோசினேட் (Gluphosinate) “இன்னும் கூடுதல் நச்சுத் தன்மையுடையது” என்று இந்த மரபீனி மாற்றக் கடுகின் கொடிய தீமையை அடுக்கிக் கொண்டே செல்கிறது இந்த ஆய்வுக்கட்டுரை. எம்.எஸ். சுவாமி நாதன் (விரிவிற்கு காண்க : PC Kesavan & M.S. Swaminathan - “Modern Technologies for Sustainable Food and Nutrition Security” - Current Science - 25 November, 2018).

திரும்பிய பக்கமெல்லாம் அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களோடு மரபீனி மாற்றக் கடுகுக்கு எதிரான ஆய்வு முடிவுகள் குவிந்திருக்கும்போது அவை அனைத்தையும் புறந்தள்ளி பாயர் - மான்சாட்டோ நிறுவனங்களின் காலடியில் இந்திய உழவர்களை வைப்பதற்கு மோடி அரசு துடியாய்த் துடிக்கிறது.

ஏகாதிபத்திய நிறுவனச் சார்பையே தற்சார்பு என்ற பெயரால் தேசபக்த வியாபாரம் செய்வதுதான் மோடி மாடலின் தனித்தன்மையாகும்.

இந்தியா தனது உணவு எண்ணெய்த் தேவைக்கு வெளிநாடுகளைச் சார்ந்து இருக்கும் நிலையிலிருந்து தற்சார்பாகத் தலைநிமிர்ந்து நிற்பதற்காகவே கூடுதல் விளைச்சல் தரும் மரபீனி மாற்றக் கடுகை விரும்புவதாக மோடியின் ஆட்கள் தம்பட்டம் அடிக்கிறார்கள்.

உண்மையில் உணவு எண்ணெய்த் தேவைக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதியைச் சார்ந்திருப்பதே செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலைதான்.

தாராளமயப் பொருளியல் கொள்கை நிலை பெறுவதற்கு முன்பு 1994 வரை இந்தியாவின் உணவு எண்ணெய்த் தேவையில் 97 விழுக்காடு உள்நாட்டு விளைச்சலையே சார்ந்திருந்தது.

ஆனால், உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதன் நிபந்தனைப்படி தாராள உணவு எண்ணெய் இறக்குமதியை அனுமதித்த பிறகுதான் இந்தத் தற்சார்பு தலைகீழாக மாறிப்போனது. உணவு எண்ணெய் இறக்குமதிக்கான வரி வெகுவாகக் குறைக்கப் பட்டது. இந்தோனேசியா, மலேசியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவை குறைந்த விலையில் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்தன.

இதனால், மரபான நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காயெண்ணெய், கடுகு எண்ணெய் பயன்பாடுகள் வெகுவாகக் குறையத் தொடங்கின. அந்த இடத்தை இறக்குமதியான எண்ணெய்கள் பிடித்துக் கொண்டன. இன்று ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் உணவு எண்ணெய் இறக்குமதி ஆகிறது.

இது செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலையே தவிர மக்களின் உணவு எண்ணெய்த் தேவையை உள்நாட்டு உற்பத்தியால் நிறைவு செய்ய முடியாததால் ஏற்பட்ட சிக்கலல்ல!

தற்சார்பு என்ற பெயரால் மரபீனி மாற்றக் கடுகும் அதைத் தொடர்ந்து பிற உணவுப் பயிர்களும் திணிக்கப்பட்டால் அது மேற்குலக நாடுகளின் பொருளியல் அடிமையாக இந்தியாவை மாற்றும் நடவடிக்கையாகும்.

காது கிழிக்கும் பாரதமாதா பஜனை சத்தத்திற்குப் பின்னால் நடக்கும் மோடி மாடல் சூழ்ச்சி இது!

ஏற்கெனவே இந்த மண்ணிற்கும், மரபிற்கும், மக்களுக்கும் தொடர்பில்லாத எண்ணெய்களை இறக்குமதி செய்து மக்களை நோயாளிகளாக்கியது போதாதென்று மரபீனி மாற்ற உணவுப் பயிர்களைத் திணித்து தீராத நோயாளிகளாக மக்களைச் சீரழிக்கும் அடுத்த திட்டத்தில் மோடி அரசு இறங்கியிருக்கிறது.

எனவே, உழவர்களையும், உணவு உண்ணும் பெருந்திரள் மக்களையும், சுற்றுச் சூழலையும் நாச மாக்கும் மோடி அரசின் திட்டத்தை மக்கள் முறியடிக்க வேண்டும்.

“மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே” என்ற ஒற்றைக் குரலில் அனைத்துப் பகுதி மக்களும் எழுச்சி கொள்ள வேண்டும்!

(இக்கட்டுரை தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2022 நவம்பர் இதழில் வெளியானதாகும்).

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

0 கருத்துகள்: