கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

" அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கை, கள நிலைமைக்கு முரண்பாடாக உள்ளது! தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கை,

கள நிலைமைக்கு முரண்பாடாக உள்ளது!
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பை
உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!
=========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் அறிக்கை!
=========================================


ஓசூர் அருகில், கெலமங்கமலம் வன்னியபுரத்தில் நிறுவப்பட்டு வரும் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில், அயலாருக்கே அதிகம் வேலை வாய்ப்புத் தரப்படுகிறது, தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சுட்டிக்காட்டி, அதற்காக வரும் 2022 திசம்பர் 9 அன்று, அத்தொழிற்சாலை முன்னால் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருக்கிறது.

இந்த டாட்டா நிறுவனம் உட்பட தமிழ்நாட்டின் பெரு நிறுவனங்களில், தமிழர்கள் இன ஒதுக்கலுக்கு ஆளாகி வெளி மாநிலத்தவர்களுக்கே அதிகம் வேலை வாய்ப்புத் தரப்படுகிறது என்பதை பல தரப்பினரும் எடுத்துக்கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (25.11.2022) தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாட்டா எலக்ட்ரானிக்ஸ் – ஐபோன் தொழிற் சாலையில் மொத்தம் 18,000 பேர் வேலைக்கு அமர்த்தபடுவார்கள், அதில் ஏற்கெனவே 5,500 பேரும், அண்மையில் 2,000 பேரும் தமிழ்நாட்டு இளையோர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், மொத்தமுள்ள 18,000 பேரில் 80 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்கப்படுவதை அரசு உறுதி செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சில நாட்களுக்கு முன்பு தில்லியில் ஒரு அரசு விழாவில் பேசிய இந்தியாவின் தொலைத்தொடர்புக்கான துணை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இதே டாட்டா தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் இராஞ்சியிலும், அசாரிபாக்கிலும் 6,000 இளம்பெண்களுக்கு அத்தொழிற்சாலை பணிகளுக்காகப் பயிற்சி அளிக்கப்பட்டு தயார்நிலையில் இருப்பதாக அறிவித்தார். (The Financial Express, 16.11.2022).

ஏற்கெனவே, ஒரே சிறப்புத் தொடர்வண்டியில் ஜார்க்கண்ட்டிலிருந்து 860 பெண்கள் இத்தொழிற்சாலைக்கு அழைத்து வரப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பே இந்தி மாநிலங்களிலிருந்தும், கர்நாடகம் – ஆந்திரா – மகாராட்டிரம் போன்ற மாநிலங்களிலிருந்தும் பெண்கள் இத்தொழிலையின் வேலைகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

அமைச்சர் தங்கம் தென்னரசோ, மொத்தமுள்ள 18,000 பேரில் 80 விழுக்காட்டு வேலை வாய்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கே உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். தில்லி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவோ, ஜார்க்கண்ட்டிலிருந்து இன்னும் 6,000 பேர் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். ஏற்கெனவே, ஏறத்தாழ 2,000 பேர் வெளி மாநிலத்தவர்கள் சேர்க்கப்பட்டு விட்டார்கள்.

அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், 18,000 பேரில் 80 விழுக்காட்டு வேலைகள் தமிழருக்கே எனச் சொல்வதற்கும், இந்த நிலவரங்களுக்கும் முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது.

எனவே, தமிழ்நாடு அரசு – அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்வது சரியா, இந்திய அமைச்சர் வைஷ்ணவ் சொல்வது சரியா, டாட்டா நிறுவனம் அளித்துள்ள புள்ளி விவரம் சரியா என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் - டாட்டா உள்ளிட்ட தமிழ்நாட்டின் தனியார் தொழில் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும்; 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. குறைந்தது, தங்கம் தென்னரசு சொல்வது போல் 80 விழுக்காடு வேலைகள் தமிழர்களுக்கு உறுதி செய்து, 20 விழுக்காட்டிற்கும் மேல் உள்ள வெளி மாநிலத்தவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்!

“தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை இந்த அரசு உறுதி செய்யும்” என்று பொத்தாம் பொதுவில் சொல்லிக் கொண்டிருக்காமல், தமிழ்நாடு அரசு அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளவாறு, முதல் கட்டமாகத் தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே இருக்க வேண்டும் என்பதற்கு தனிச்சட்டம் இயற்றி உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் இவ்வாறு அந்தந்த மண்ணின் மக்களுக்கு வேலையை உறுதி செய்யும் சட்டங்களும், அரசாணைகளும் செயலில் உள்ளதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதாரங்களுடன் பலமுறை எடுத்துக் காட்டியுள்ளது.

இப்போதாவது, தமிழ்நாடு அரசு உடனடியாக தனிச்சட்டம் இயற்றி, தமிழர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்து தமிழ்நாடு அயலாரின் வேட்டைக் காடாக மாறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================

0 கருத்துகள்: