கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"இல்லம் தேடி மதுபானம் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


இல்லம் தேடி மதுபானம் திட்டத்தை

தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் அறிக்கை!
=====================================


அன்றாடம் காலை – மாலை – இரவு என்று, இடைவிடாமல் அடுத்தடுத்து மக்கள் பகை சட்டங்களையும், திட்டங்களையும் அறிவிப்பதில் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் போட்டி போடுகின்றன. அந்த வகையில், மதுப் பிரியர்கள் டாஸ்மாக் கடைக்குச் செல்ல வேண்டியதில்லை. அவர்கள் இருக்கும் இடம் தேடி உருக்கமுடன் மதுபானங்கள் வந்து சேரும் என்பதற்கான திட்டத்தை நேற்று (23.04.2023) தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

மது உரிமங்கள் மற்றும் வழங்கல் விதிகளில் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி திருமண மண்டபங்கள், விழாக் கூடங்கள், விளையாட்டுத் திடல்கள், வீடுகள் ஆகியவற்றில் விழாக் காலங்களுக்குத் தற்காலிக உரிமம் பெற்று, மதுபானங்கள் வழங்கலாம்.

இனி, விளையாட்டுத் திடலுக்கு பார்வையாளராகச் செல்வோர், திருமணங்களுக்குச் செல்வோர், டாஸ்மாக் கடைகளுக்கு நேரடியாகச் சென்றோ ஆட்களை அனுப்பியோ மதுபானங்கள் வாங்க வேண்டியதில்லை. இருந்த இடத்திலேயே அவை கிடைக்கும். இதற்கென்று விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்களும். திருமண மண்டபத்தினரும், இல்லத் தலைவர்களும் ஒரு குறிப்பிட்ட தொகையை மாவட்ட ஆட்சியரிடம் செலுத்தினால் போதுமானது.

பொது இடங்களையும், விழாக்கள் நடைபெறும் இடங்களையும் முற்றிலும் போதை மன்றங்களாக மாற்றிச் சீரழிக்கும் மிகக் கேடான திட்டம் இது!

குடும்ப விழாக்களிலும், இல்லங்களிலும் தாராளமாக மதுபானங்கள் புழங்கத் தொடங்கி விட்டால், இதுவரை மது போதைப் பழக்கத்திற்கு ஆளாகாத சிறுவர்களும், பெண்களும் பலியாவது விரிவாகும். ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தையே போதைச் சமூகமாக்கும் படுமோசமான திட்டமாகும் இது!

தமிழ்நாடு அரசு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, இல்லம் தேடி மது வழங்குவது தமிழினத்தை தலைதூக்கவிடாமல் செய்யும் குற்றச்செயலாகும்.

தமிழ்நாடு அரசு, தனது சொந்த நிதியைப் பெருக்கிக் கொள்வதற்கு ஆவின் பால் நிறுவனத்தை விரிவாக்குவது, இயற்கை வளங்களை முறைப்படுத்துவது போன்ற மாற்று வழிகள் ஏராளமாக இருக்கின்றன.

ஆளுங்கட்சி – முதன்மை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மது உற்பத்தியாளர்களாக இருப்பதால், தமிழ்நாடு அரசு மீண்டும் மீண்டும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, மது விற்பனையை விரிவாக்குகிறதோ என்ற ஐயம் வலுவாக எழுகிறது.

எனவே, தமிழ்நாட்டு தி.மு.க. அரசுக்கு கொஞ்சமாவது மக்கள் மீது அக்கறை இருக்குமானால் மதுபான விற்பனையை விரிவாக்கும் இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

0 கருத்துகள்: