கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"கல்விக் குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர்நேசன் விலகல்! முதலமைச்சர் தலையிட்டு தீர்வுகாண வேண்டும்!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


கல்விக் குழுவிலிருந்து

பேராசிரியர் ஜவகர்நேசன் விலகல்!
முதலமைச்சர் தலையிட்டு தீர்வுகாண வேண்டும்!
=======================================
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!
=======================================


தமிழ்நாடு உயர்நிலை கல்விக் குழுவிலிருந்து அதன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இல. ஜவகர்நேசன் விலகியிருக்கிறார். அதற்கான காரணத்தை விளக்கி விரிவானதொரு அறிக்கையையும் ஏடுகளுக்கு அனுப்பியிருக்கிறார்.

மோடி அரசின் ஆரியத்துவ - பெருங்குழும வேட்டைக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகப் பாசாங்கு செய்யும் மு.க. ஸ்டாலினின் திமுக அரசு, உண்மையில் அக்கல்விக் கொள்கையின் கூறுகளைப் பள்ளிக் கல்வியிலும் உயர்நிலைக் கல்வியிலும் செயல்படுத்தி வருகிறது என்பதை அவ்வப்போது சுட்டிக் காட்டியிருக்கிறோம். இல்லந்தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன் திட்டம், உயர்கல்வியில் கிரேடு முறை போன்ற பலவகைகளில் மோடி அரசின் கல்விக் கொள்கையை திமுக அரசு தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது.

ஆயினும், ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் பேராசிரியர் இல. ஜவகர்நேசனை ஒருங்கிணைப்பாளராகவும், பல்வேறு கல்வியாளர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு மாநில கல்விக் கொள்கை உயர்நிலைக் குழு உருவாக்கப்பட்டபோது, இந்திய அரசின் மக்கள் பகைக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, சமத்துவ மக்கள் நல கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என பலரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், மோடி அரசின் பிற்போக்குக் கல்விக் கொள்கையை ஒட்டியே மாநிலக் கல்விக் கொள்கை அமையப் போகிறது என்பதை முன்னறிவிப்பதாக ஜவகர்நேசனின் விலகல் அறிவிப்பு விளங்குகிறது.

”இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநிலக் கல்விக் கொள்கையானது, பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட, தனியார்மய, வணிகமய, கார்ப்பொரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களைக் கொண்டிருக்கிற தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் மற்றொரு வடிவமாகவே இருக்கும். இந்நிலை நீடித்தால், அது தமிழக மக்களின் விருப்புணர்வுகளுக்கும், தமிழ்ச் சமூகத்தின் உயரிய விழுமியங்களுக்கும் பெரும்பாலும் எதிராக கல்விக் கொள்கையின் விளைவுகள் இருக்கும் என அஞ்சுகிறேன்” என்று ஜவகர்நேசன் எச்சரிப்பது கல்வித் துறையில் வரக்கூடிய ஆபத்தை முன்னறிவிக்கிறது.

அரசாணை 90-ன் வழியாக இந்த உயர்நிலைக் குழு நிறுவப்பட்ட மறு நிமிடத்திலிருந்தே பேராசிரியர் ஜவகர்நேசன் மிகுந்த நம்பிக்கையோடு கடுமையாக உழைத்தார். மிகக் குறுகிய காலத்தில் அவர் அணியப்படுத்தி பல்வேறு துணைக் குழுக்களுக்கு அனுப்பிய 150 பக்க Problem Statement என்ற கருத்துரு மிகப்பெரும் வழிகாட்டும் ஆவணமாக அமைந்தது. இருக்கிற அதிகார வரம்பு, நிதிநெருக்கடி ஆகியவற்றுக்கிடையே என்னென்ன சிக்கல்களை முன்னுரிமை கொடுத்தும், தொலைநோக்கு நிலையிலும் தீர்க்க வேண்டும் என்பதற்கு கருத்துகளைப் பெறும் முன் முயற்சியாக அந்த ஆவணம் விளங்கியது.

அமைக்கப்பட்ட 13 வல்லுநர் குழுக்கள், உலகளாவிய கல்விசார் வல்லுநர்கள் போன்றோரின் ஆய்வு முடிவுகளையும், தனது ஆய்வு முடிவுகளையும் ஒருங்கிணைத்து ‘Initial Policy Inputs’ என்ற 232 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையையும் உயர்நிலை குழுவிற்கு முன்வைத்திருக்கிறார்.

ஆனால், இந்த அறிக்கை, ஆவணம் எதுபற்றியும் கருத்தில் கொள்ளாமல் மோடி அரசின் கருத்துநிலைக்கு இசைவாக கொள்கையை உருவாக்குமாறு உயர்நிலைக் குழு அழுத்தத்துக்கு உள்ளாவதை உணர்ந்த ஜவகர்நேசன் அதைச் சரிசெய்வதற்கு உரியவாறு முயற்சிகளைச் செய்து பார்த்திருக்கிறார்.

தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரனின் அதிகாரத்துவ - அநாகரிகத் தலையீடுகள், மிரட்டல்கள் உயர்நிலைக் குழு தற்சார்பாக இயங்கமுடியாத தேக்க நிலையை ஏற்படுத்திய சூழலில், முதலில் அக்குழுவின் தலைவர் நீதிபதி முருகேசனிடமும், அது பலனளிக்காத போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறார். முதலமைச்சரிடம் இருந்தும் பதிலில்லை.

இச்சூழலில், பயனுள்ள வகையில் உயர்நிலைக் குழுவில் தொடர்ந்து செயல்பட முடியாது என்பதை உணர்ந்து அதிலிருந்து விலகியிருக்கிறார்.

இந்நிகழ்வை ஏதோ ஒரு அதிகாரி இன்னொரு அதிகாரியோடு ஏற்பட்ட மோதலால் பதவி விலகி இருப்பதாகக் கருதி எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது.

மக்கள் நல கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரிப்பதற்கான அறிகுறியாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் இச்சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு பேராசிரியர் ஜவகர்நேசனை அழைத்துப் பேசி உயர்நிலைக் குழு ஒருங்கிணைப்பாளராக அவர் தொடர்வதற்கும், அவர் தொகுத்து முன்வைத்திருக்கிற மாநிலக் கல்விக் கொள்கைக்கான இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், உயர்நிலைக்குழு சுதந்திரமாகச் செயல்பட்டு தமிழ்நாட்டிற்கான தனித்தன்மையுள்ள கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கும் ஆவண செய்ய வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

0 கருத்துகள்: