கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"சூழ்ச்சியை மறைக்க இன்னொரு சூழ்ச்சி! 2000 ரூபாய் பணத்தாள் திரும்பப் பெறும் திட்டம்! " ---- தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன்அறிக்கை!


சூழ்ச்சியை மறைக்க இன்னொரு சூழ்ச்சி!

2000 ரூபாய் பணத்தாள் திரும்பப் பெறும் திட்டம்!
=================================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
ஐயா கி.வெங்கட்ராமன்அறிக்கை!
=================================================


இந்திய அரசின் சேம வங்கி (ரிசர்வ் வங்கி) 2000 ரூபாய் பணத்தாள்களை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக நேற்று (19.05.2023) அறிவித்திருக்கிறது.

இதன்படி, 2023 மே 23 தொடங்கி செப்டம்பர் 30 வரை மக்கள் தங்களிடமுள்ள 2000 ரூபாய் பணத்தாளை வங்கிகளில் சேமிப்பில் செலுத்தலாம் அல்லது சில்லரையாக மாற்றிக் கொள்ளலாம் என கால வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த இந்திய சேம வங்கியின் அறிவிக்கை தமது “தூய பணத்தாள் கொள்கை” (Clean note Policy) ப்படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகத் தெரிவிக்கிறது. அதே நேரம், பணத்தாள் மாற்ற காலக் கெடுவுற்குப் பிறகும் 2000 ரூபாய் தாள் தொடர்ந்து செல்லுபடியாகும் எனவும் விளக்கமளித்திருக்கிறது. அதாவது இது செல்லா நோட்டு அறிவிப்பல்ல. புழக்க விலக்க அறிவிப்பாகும். அக்டோபர் 1, 2023 க்குப் பிறகும் 2000 ரூபாய் நோட்டு செல்லும்.

2016 நவம்பர் 8ஆம் நாள் 1000 ரூபாய் மற்றும் 500 பணத்தாள்கள் செல்லாது என மோடி அறிவித்ததைத் தொடர்ந்து 2000 ரூபாய் பணத்தாள் சுழற்சிக்கு வந்தது. அப்போதே மீண்டும் புதிய 500 ரூபாய் பணத்தாளும் வெளியிடப்பட்டது.

இவ்வாறு வெளியிடப்பட்ட ஓராண்டுக்குள்ளேயே, 2017 ஆம் ஆண்டிலேயே 2000 ரூபாய் பணத்தாள் அச்சடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போதைய அறிவிப்பின்படி வங்கிகள் 2000 ரூபாய் பணத்தாளை இனி புழக்கத்திற்கு விடாது.

ஏற்கெனவே இருக்கிற சட்டவிதிகளின்படி ரூபாய் தாள் கடுமையான அழுக்கடைந் திருந்தாலோ, கிழிந்திருந்தாலோ வங்கிகளில் கொடுத்தால் அதே மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறமுடியும். ஆனால், ஒருவர் கிழிந்த 2000 ரூபாய் தாளை வங்கியில் கொடுத்தால் புதிய 2000 ரூபாய் தாள் தரமாட்டார்கள். மாறாக சில்லரை பணத்தாளாக மாற்றித்தான் தருவார்கள். இவ்வளவுதான் வேறுபாடு.

2000 ரூபாய் பணத்தாள் திரும்பப்பெறப்படுவதின் உண்மையான நோக்கம் அந்தப் பணத்தாள் அழுக்கடைந்துவிட்டது அல்லது கிழிந்துவிட்டது என்பதற்காக அல்ல. ஏனெனில், புழக்கத்திற்கு வந்த 6 ஆண்டுகளில் ரூபாய் நோட்டு சேதமடைவதற்கான வாய்ப்பு இயல்பில் மிகமிகக் குறைவு. உண்மையான காரணம் 2000 ரூபாய் பணத்தாளில் கள்ள நோட்டு புழக்கம் (Fake currency) அளவுகடந்துவிட்டது என்பதே ஆகும்.

நரேந்திரமோடி 2016இல் ரூபாய் நோட்டு செல்லாது என சூழ்ச்சியாக அறிவித்தபோதே இதனை நாம் சுட்டிக் காட்டினோம்.

”1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது பணப் பதுக்கலையும், கறுப்புப்பண புழக்கத்தையும் எளிதாக்குமே தவிர தடுத்துவிடாது.

தமிழ்நாட்டில், தஞ்சை, அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் தேர்தலில் புழக்கத்தில் விடப்படும் கன்டெயினர் லாரி பணத்தை இது தடுத்துவிட்டதா என்று பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. பதுக்கி வைத்த ரூபாய் நோட்டுகளை வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ளும் முகவர்களாக வாக்காளர்களையே மாற்றிவிடும் வாய்ப்பு இதில் திறந்துவிடப்பட்டது. வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கையூட்டுத் தொகை அதிகரித்ததை இத் தேர்தல்கள் காட்டின. இதுவரை 1000 ரூபாயாக இருந்த ஓட்டின் விலை 2000 ஆக உயர்ந்ததை இத்தேர்தல்கள் காட்டின.”

(விரிவிற்கு காண்க: ‘செல்லாத ரூபாய் செல்லாத சூழ்ச்சி’ – கி.வெங்கட்ராமன் – பன்மைவெளி வெளியீடு)

1000 ரூபாய் நோட்டுக்குப் பதிலாக, 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரப்போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்ததால், உள்துறை அமைச்சர் அமித் ஷா குடும்பத்தினரும் அவருக்கு வேண்டியவர்களும் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டனர் என்பதை ஏடுகள் தெரிவித்தன. இன்று, 2000 ரூபாய் கள்ள நோட்டு அதிகமான அளவில் பணச்சந்தையில் உலவுகிறது.

2016 ஆம் ஆண்டு செல்லாத பணத்தாள் அறிவிப்பின் முக்கியமான காரணம் பாக்கித்தானிலிருந்து பயங்கரவாதிகளின் வழியாக கள்ள நோட்டு புழக்கத்தில் வந்து விட்டது என்பதாகும். அது பொய்யான காரணம் என்பது அப்போதே அம்பலமானது. கள்ளநோட்டு மற்றும் கறுப்புப் பண புழக்கத்திற்கு 2000 ரூபாய் நோட்டு கூடுதல் வாய்ப்பானது என அப்போதே எச்சரித்தோம். அது உண்மையாகி விட்டதை இந்திய சேம வங்கியின் இப்போதைய அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.
சேம வங்கியின் இந்த அறிவிப்பிற்கு உட்பட்டு எளிய மக்கள் 2000 ரூபாய் நோட்டை வங்கிகளில் செலுத்திவிடுவார்கள்.

ஆயினும், இது தொடர்ந்து செல்லுபடியாகும் என்ற நிலையில் வங்கிகளில் செலுத்துவதற்கான காலவரம்பு செப்டம்பர் 30 க்குப் பிறகும் நீடிக்க வாய்ப்புண்டு. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மத்தியபிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்தடுத்து வருகின்றன.

இத்தேர்தல்களில் வாக்காளர்களுக்குக் கையூட்டாக 2000 ரூபாய் கள்ள நோட்டுகளையும் சேர்த்து வழங்கும் வாய்ப்பு கட்சிகளுக்குக் கிடைக்கும். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் முகவர்களாக மக்களே மாற்றப்படும் வாய்ப்பும் அதிகம். இந்த 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை வேறு சில்லரை நோட்டுகளாக மாற்றிவிட்டால் மக்களுக்கு இலாபம். இது கள்ள நோட்டு என கண்டுபிடித்து வங்கி அதிகாரிகள் வாங்க மறுத்தால் அதை மக்கள் வெளியேயும் சொல்ல முடியாது.

இந்திய சேம வங்கியின் இந்த அறிவிப்பு பொருளியலைச் சீர்படுத்த எந்த வகையிலும் உதவப் போவதில்லை. மாறாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கவும் கள்ள நோட்டை நல்ல நோட்டாக மாற்றவும் பயன்பட வாய்ப்பு உண்டு.

==================================
தலைமைச் செயலகம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================
பேச : 9443918095
புலனம்: 9841949462
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
வலைத்தளம்: www.tamizhdesiyam.com
சுட்டுரை: www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள்: youtube.com/Tamizhdesiyam
========================================

0 கருத்துகள்: