கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"புதிய நாடாளுமன்றம் - தமிழினத்திற்கெதிரான கொலைவாள்!" --- தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


 



புதிய நாடாளுமன்றம் -
தமிழினத்திற்கெதிரான கொலைவாள்!
================================
தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

================================

தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தை, இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி திறந்து வைத்திருக்கிறார். திறப்பதற்குத் தேர்வு செய்த நாள், திறப்பாளராகத் தேர்வு செய்த நபர் ஆகிய அனைத்திலும் மோகன் பகவத் - மோடி கூட்டணியின் அடாவடித்தனம் வெளிப்பட்டது.

சாவர்க்கரின் பிறந்தநாளான மே 28-ஐ தேர்ந்தெடுத்ததின் மூலம் இது ஆரியத்துவ ஆட்சிதான் என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்தி இருக்கிறது மோகன் பகவத் - மோடி அணி!

குடியரசுத் தலைவரை இவ்விழாவிலிருந்து முற்றிலும் ஒதுக்கி வைத்தது, ஒடுக்குண்ட மக்களின் புறக்கணிப்பு, அரசமைப்பு நெறி மீறல் என காங்கிரசு, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது சரியே!

ஆனால், இந்த ஆரவாரங்களுக்கும் எதிர்ப்புக் கூச்சல்களுக்குமிடையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம், மிகப்பெரிய தமிழின ஒடுக்குமுறைக் கருவியாக நாடாளுமன்றத்தை வலுப்படுத்தப் போகிறது என்ற பேராபத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்தப் புதிய கட்டடமே கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் தேவையைக் கருதித் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே உள்ள நாடாளுமன்றமே, முதன்மையான தமிழின ஒடுக்குமுறைக் கருவி என்பதை நாம் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறோம்.

நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மக்கள் தொகை அடிப்படையில், உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்து வரையறுக்கப்பட்டிருப்பது தான் செயற்கையாக தமிழினத்தை நிரந்தர சிறுபான்மையாகவும், இந்தி இனத்தை நிரந்தர பெரும்பான்மையாகவும் வைத்திருக்கிறது.

இப்போதுள்ள நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் தமிழ்நாட்டிற்கு 39, புதுச்சேரிக்கு 1 என மொத்தம் 40 உறுப்பினர்கள் தான் தமிழர்களுக்கு! இந்தி இனத்திற்கு 225! இந்தி சாயல் உள்ள பிற இன உறுப்பினர்களைச் சேர்த்துப் பார்த்தால், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வதற்கான உறுப்பினர் வலு அவர்களுக்கு இருக்கிறது.

புதிய நாடாளுமன்றத்தில் இந்த நிலை இன்னும் கொடிய வகையில் மாறப் போகிறது.

நடப்பிலுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் வரையறை 1971ஆம் ஆண்டு, மக்கள் தொகை அடிப்படையில் உள்ளது. 2026க்குப் பிறகு, இது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது ஏற்கெனவே இயற்றப்பட்ட சட்டத்தின் நிலை!

மோகன் பகவத் - மோடி அணியும் ஒற்றையாட்சி நோக்கியே நகர்ந்து கொண்டுள்ளது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை - அதை உறுதிப்படுத்தும் ஆபத்து இருக்கிறது.

15ஆவது நிதி ஆணையத்தை முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 2026ஆம் ஆண்டுக்கு அதனைக் கணக்கு நீட்டிப்பு (Projection) செய்து, தொகுதி வரையறைகளை உருவாக்குவது என்ற திட்டம் பா.ச.க. அரசிடம் இருக்கிறது.

இந்தக் கணக்கின்படி தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39லிருந்து 49 ஆக உயரும். மறுபுறம் உத்திரப்பிரதேசத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 80லிருந்து 143 ஆகவும், பீகாருக்கு 40லிருந்து 79 ஆகவும், மத்தியப்பிரதேசத்திற்கு 29 லிருந்து 52 ஆகவும் ஆக மொத்தம் இந்தி மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை 225லிருந்து 408 ஆகவும் உயர இருக்கிறது.

அவ்வாறான சூழலில், இந்திக்காரர்களை ஒப்பிட தமிழ்நாட்டின் வலு இப்போதிருப்பதைவிட மிகமிகச் சிறயதாக மாறிப்போகும். நாடாளுமன்ற சனநாயகம் என்ற வடிவத்திலேயே ஒரு கட்டமைப்பு இன அழிப்பு நிகழ்வதற்கான வாய்ப்பை புதிய நாடாளுமன்றம் உருவாக்குகிறது.

எப்போது மோடி தமிழையும், தமிழரையும் உயர்த்திப் பேசினாலும், அது தமிழினத்திற்கெதிரான புதிய தாக்குதலின் அறிகுறி எனத் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.

பாப்புவா நியூ கினியாவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டுவிட்டு, தமிழ் மொழியை மோடி புகழ்ந்து பேசியதும், தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்பட்ட செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்து சிறப்பு செய்யப் போகிறோம் எனக் கூறுவதும் தமிழின அழிப்பை மறைப்பதற்கான பெரும் சூது!

தமிழ்நாட்டுக் கட்சிகளும், ஊடகங்களும் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவின் அலங்கோலங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழின ஒதுக்கல் (Aparthied) தீவிரம் பெறுவதற்கும், நிலைப்படுவதற்கும் ஒரு சனநாயக வடிவம் தயாரிக்கப்படுகிறது என்ற ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள்.

இதனை மக்களுக்கு உணர்த்தும் கடமை தமிழ்த்தேசியர்களுக்கே இருக்கிறது!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2023 சூன் மாத இதழின் ஆசிரியவுரை இது).

==================================
தலைமைச் செயலகம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================
பேச : 9443918095
புலனம்: 9841949462
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
வலைத்தளம்: www.tamizhdesiyam.com
சுட்டுரை: www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள்: youtube.com/Tamizhdesiyam
========================================

0 கருத்துகள்: