கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"தமிழ்நாடு அரசு நிர்வாகம் வெளியார்மயம்!"----- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


தமிழ்நாடு அரசு நிர்வாகம் வெளியார்மயம்!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
=====================================


தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த திரு. இறையன்பு பணி ஓய்வு பெற்றதையடுத்து, திரு. சிவதாஸ் மீனா அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலாளராகப் பணியமர்த்தி இருக்கிறார். அதுபோல், புதிய காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) சங்கர் ஜிவாலும், சென்னைக் காவல் ஆணையர்களாக சந்திப்ராய் ரத்தோர், பிரேமானந்த் சின்கா, கபில்குமார் சரத்கார் ஆகியோரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இதற்குமேல், கூடுதல் தலைமைச் செயலாளர்களாக இருக்கும் அதுல்யா மித்ரா, சந்தீப் சக்சேனா, மணீந்திர ரெட்டி, விக்ரம் கபூர் போன்றவர்களும் வெளி மாநிலத்தவர்களே!

இத்தோடு, பல்வேறு துறைச் செயலாளர்கள், மண்டல - மாவட்ட அளவிலான காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோரையும் கணக்கில் கொண்டால், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் நிர்வாகம் வெளியார் மயமாகி இருப்பது புலப்படும்!

ஏற்கெனவே, தமிழ்நாட்டின் தொழில், வணிகம் ஆகியவை மார்வாடிகள், மலையாளிகள், ஆந்திரத் தெலுங்கர்கள் வசம் சிக்கிவிட்டன. தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு அலுவலகங்கள், இந்திக்காரர் மயமாகிவிட்டன. முக்கியமான தொழில் நகரங்கள் மட்டுமின்றி, பேரூராட்சிப் பகுதிகள் கூட வடமாநிலத் தொழிலாளர்களால் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில், அனைத்துநிலை உயரதிகாரிகளும் வெளி மாநிலத்தவராக இருக்கும்போது, தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே வாக்குரிமை மட்டும் உள்ள அடிமைக் குடிகளாக அலையும் நிலை ஏற்படும். கீழ்மட்ட உழைப்பிலிருந்து, உயர்மட்ட அரசு நிர்வாகம் வரை வெளி மாநிலத்தவர்களால் நிரம்பும்போது, தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்பதே பொருளற்றதாக மாறிவிடுகிறது.

நடைமுறையில், மார்வாடி - மலையாளி போன்ற வெளிமாநில வணிகர்களோடும், இந்திக்காரத் தொழிலாளர் களோடும் உள்ளூர் தமிழர்களுக்கு அங்கங்கே முரண்பாடுகள் - உரசல்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டிற்குள்ளேயே வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுத் தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்துவதையும் பார்க்கிறோம்.

இவ்வாறான சூழலில், பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஞாயம் கேட்டு, மாவட்ட நிர்வாகத்தையோ காவல்துறையையோ அணுகும்போது, அங்கே வெளிமாநில அதிகாரிகள் இருக்கும்நிலையில், தங்களது பாதிப்பை மனம் விட்டு சொல்வதற்குக் கூட தயக்கம் ஏற்படும். ஞாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஒவ்வொரு மட்டத்திலும் மறுக்கப்படும்.

அடிப்படையில், இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.), இந்தியக் காவல் பணி (ஐ.பி.எஸ்.), இந்திய வருவாய்ப் பணி (ஐ.ஆர்.எஸ்.) போன்ற அனைத்திந்திய பணிகளே கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் கூறி வருகிறது.

1990 பிப்ரவரி 25 அன்று, சென்னையில் நடத்திய தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாட்டிலேயே இந்தியாவை இறையாண்மையுள்ள தேசிய இனக் குடியரசுகளின் ஒன்றியமாக மறுசீரமைக்க வேண்டுமென்ற முழக்கத்தை முன்வைத்த தமிழ்த்தேசியப் பேரியக்கம், இந்தியக் குடிமைப் பணிகள் குறித்த தீர்மானத்தையும் நிறைவேற்றியது.

தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணிக்கு (ஐ.ஏ.எஸ்.) பதிலாக தமிழ்நாடு ஆட்சிப் பணியும், இந்தியக் காவல் பணிக்கு மாற்றாக தமிழ்நாடு காவல் பணியும், இந்திய வருவாய்ப் பணிக்கு மாற்றாக தமிழ்நாடு வருவாய்ப் பணியும், இந்திய வனத்துறைப் பணிக்கு பதிலாக தமிழ்நாடு வனத்துறைப் பணியும் உருவாக்கப்பட வேண்டுமென்று கூறியது.

இந்த அடிப்படை மறுசீரமைப்பு ஒருபுறமிருக்க, உடனடியாக தமிழ்நாடு அரசின் உயர் பணிகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் பணியமர்த்தக் கூடாது!

பெரும்பாலும், அமைச்சர்கள் அன்றாட நிர்வாகப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளால் வழி நடத்தப்படுவது இயல்பு. இவ்வாறான சூழலில், இந்த உயர்மட்ட அதிகாரிகள் பெரும்பாலோர் வெளியாராக இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு அன்றாட நிர்வாக நடவடிக்கைகளில் கூட இந்த மண்ணின் மக்களுக்கு உரியதாக இருக்காது. அமைச்சர்களே நினைத்தாலும்கூட, தமிழர்களுக்கு ஆதரவான முடிவுகளை செயல்படுத்துவதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முட்டுக்கட்டைகள் போடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசு நிர்வாகமே, வாக்களித்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு புறம்பானதாக முற்றிலும் மாறிப்போகும்!

இவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அரசின் உயர்மட்டப் பணிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளை பணியமர்த்துவதைக் கைவிட வேண்டும்! தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளையே அமர்த்த வேண்டும்!

இப்போது, தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகிய உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ள வெளிமாநிலத்து அதிகாரிகளை மாற்றிவிட்டு, தகுதியுள்ள தமிழ்நாட்டு அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

0 கருத்துகள்: