கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"சந்திராயன் வெற்றியும் நிலவில் சூழல் சூறையாடலும்!"---"தோழர்" கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


 


சந்திராயன் வெற்றியும்
நிலவில் சூழல் சூறையாடலும்!
=========================
தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
=========================


சந்திராயன் 3 நிலவில் இறங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு தமிழ்நாட்டு மக்களையும், அறிவியல் வளர்ச்சியில் ஆர்வமுள்ள அனைவரையும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் இரசியாவின் லூனா விண்கலம் விழுந்து நொறுங்கிய பகுதியான நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திராயனிலிருந்து விக்ரம் லாண்டர் 23.8.2023 மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இது மிகப்பெரிய அறிவியல் சாதனை ஆகும்.

சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை அடுத்து நான்காவதாக நிலவில் தடம் பதித்த பெருமையைத் தாண்டி, நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையைச் சந்திராயன் 3-இன் பயணம் நிலைநாட்டியுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இச் சாதனைப் பயணத்தில் பணியாற்றிய அறிவியலாளர்கள் அனைவரும் நமது பாராட்டுக்கு உரியவர்கள். குறிப்பாக, சந்திராயன் 3 திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் வீரமுத்துவேல், துணை இயக்குநர்களாக கல்பனா, வனிதா முத்தையன் ஆகிய தமிழர்கள் பணியாற்றியிருப்பது தமிழர்களுக்கு மிகப் பெரும் பெருமை. வளர்ந்துவரும் எந்தப் புதிய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளிலும் தமிழர்கள் முன்வரிசையில் இருப்பார்கள் என்பதை இவர்கள் மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்கள்.

அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற வகையில் ஒருபுறம் மகிழத்தக்தாக சந்திராயன் 3 நிலவுப்பயணம் அமைந்திருந்தாலும், அதன் பின்னணி நோக்கத்தை அறியும்போது அதிர்ச்சியும் பதட்டமும் ஏற்படுகிறது.

விண்வெளிப் பயணத்தில் ஏற்கெனவே முன்னேறியுள்ள அமெரிக்கா, சீனா நாடுகளைப் போன்றில்லாமல் நிலவின் இருட்டுப் பகுதியான தென் துருவத்தை தேர்ந்தெடுத்து, அதைநோக்கி சந்திராயன் 3 பயணத்தை நடத்தி, அத் தென்துருவப்பகுதியில் விக்ரம் லேண்டரை இறக்கி, அதிலிருந்து ரோவர் என்ற நடமாடும் ஆய்வு நிலையத்தை செயல்படுத்தி வருகிறார்கள் என்றால் அதன் உண்மையான நோக்கம்தான் என்ன?

நிலவைப்பற்றிய அறிவியல் உண்மைகளைக் கண்டறிவதும், அதன்வழியாக இப் பேரண்டம் பற்றிய அறிவை விரிவாக்குவதும்தான் இந்திய அரசின் நோக்கமா? இல்லை! இந்திய அரசின் முதன்மையான நோக்கம் நிலவின் கனிம வளத்தை தன் பங்கிற்குச் சூறையாடுவதுதான். அதன் துணைவிளைவாக, பேரண்டம் பற்றிய இந்திய மக்களின்-தமிழர்களின் அறிவு விரிவடையலாம். ஆனால், முதன்மை நோக்கம் வளச் சுரண்டல்தான்!

இந்தப் பூமி மட்டுமின்றி, விண்வெளியும் சந்தை வேட்டைக்கு உள்ளாகி நெடு நாளாகிவிட்டது! பூமியைச் சுற்றியுள்ள இயற்கை வளமான மின்காந்த அலைகளைத் தனிச் சொத்தாக்கி விலைவைத்து விற்பது பல பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

விண்ணில் செயற்கைக் கோள்களை ஏவுவது, அவற்றைப் பயன்படுத்தி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களுக்கு மின்காந்த அலைகளைத் தருவது ஆகியவை பல இலட்சம் கோடி ரூபாய் பணம் கொழிக்கும் தொழிலாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில் நடைபெற்ற அலைக்கற்றை ஊழல், அலைப்பட்டை ஊழல் போன்றவை இந்திய அரசியலின் புதிய இயல்புநிலை ஆகிவிட்டன.

இப்போது அதைத்தாண்டி, நிலாவும், வெள்ளியும், புதனும், சூரியனும் கூட வள-வேட்டைக்கு உள்ளாக இருக்கின்றன. அந்த வகையில், கடந்த நிதியாண்டில், 800 கோடி டாலராக இருந்த இந்தியாவின் விண்வெளிச் சந்தை (Indian Space Market) வரும் 2040-இல் 5 மடங்கு வளர்ந்து 4 ஆயிரம் கோடி டாலராக வளர்வதற்கு வாய்ப்புள்ளதென இந்திய அரசின் பொருளியல் ஆய்வறிக்கை 2022-23 கூறியது.

நிலாவின் தென் துருவத்தில் உறைபனி நீர் (Water Ice) ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி டாலர் பெறுமதியான அளவுக்கு உடனடியாகக் கிடைக்கும் என்கிறார்கள்.

இதைவிட, ஹீலியம்-3 (He3 ion) அயனி ஏறத்தாழ 10000 கோடி கோடி (10¹⁸) டாலர் பெறுமதியான அளவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

இந்த ஹீலியம் 3 அயனி அணுப்பிணைப்பு வழியில் (Nuclear fusion) அணுமின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. இதுவும் அணுக்கதிரியக்கத்தை வெளியிடும். ஹீலியம் - 3 பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிப்பதற்கான பிரான்ஸ் தலைமையிலான 20 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவும் இணைந்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னால், மோடி அரசு சப்பானோடு ஹீலியம்-3 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஹீலியம்-3 யிலிருந்து அணுபிணைப்பு மின்சாரம் உருவாக்குவதில் இந்தியாவிற்கு சப்பான் தொழில் நுட்ப உதவியை முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் என்பதும், நிலாவிலிருந்து இந்தியா ஹீலியம்-3 ஐ எடுக்குமானால், அதனை சப்பானோடு முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்து கொள்வது என்பதும் இவ் ஒப்பந்தத்தின் சாரம்.

இது தவிர புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்குத் தேவையான அரிய கனிமங்களான லாண்ட்டனைடு, ஸ்கேன்டியம், (scandium) இட்ரியம் (yttrium ) போன்றவையும் நிலவின் தென்துருவத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன.

இவ்வாறு நிலவின் வளத்தை சூறையாடுவதற்கான வல்லரசுகளின் போட்டி கடந்த 2015 லிருந்தே தொடங்கிவிட்டது. இனி எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஆக்சியாம், குளோபல் ஆர்ஜின் போன்ற அமெரிக்க தனியார் நிறுவனங்கள் 2025 லிருந்து அடுத்தடுத்து நிலவில் ஆய்வுக் கலங்களை இறக்கிவிடும் திட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதற்குத் தகுந்தாற்போல் அமெரிக்க அரசு கடந்த 2015 லேயே விண்வெளி கனிமவளச் சட்டம் என்ற ஒன்றை இயற்றி அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் தனியார் பெருங்குழுமங்களும் கூட்டாகச் செயல்படுவதற்கு வழி திறந்துவிட்டிருக்கிறது.

மோடி அரசும் ஏற்கெனவே, இஸ்ரோவோடு சேர்ந்து தனியார் பெருங்குழுமங்கள் நிலா உள்ளிட்ட விண்பொருள் வளங்களைச் சூறையாடுவதற்கு ஏற்ப சட்டம் இயற்றிவிட்டது.

ஈர்ப்பு விசையும், வளிமண்டலமும் பூமியை ஒப்பிட வலு குறைவாக உள்ள நிலாவில் இந்த வளச் சுரண்டல் வேட்டை எந்த வகையான சுற்றுச் சூழல் விளைவுகளை ஏற்படுத்தும் என அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

ஆனால் அது மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.

மண்ணையும், கடலையும் சூறையாடியது போதாதென்று இப்போது விண்ணுக்கும் புறப்பட்டுவிட்டார்கள்.

சந்திராயன் 3 அறிவியல் சாதனைதான் என்றாலும் அது உயிர்மக் கோள(Bio-sphere)த்திற்கும் மனித குலத்திற்கும் ஏற்படுத்த உள்ள பேரழிவை உணரும்போது அச்சமாக இருக்கிறது.

“கண்டுபிடிப்புகளை நிறுத்துங்கள். காப்பாற்றும் வழியை யோசியுங்கள்” என்று 2019-இல் ஸ்பெயினில் நடந்த ஐ.நா. சுற்றுச் சூழல் மாநாட்டில் சூழலியலாளர்கள் எழுப்பிய முழக்கம்தான் நினைவுக்கு வருகிறது.

வரம்பற்ற அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி அறவாழ்வை அழிக்கிறது என்பதையும் சேர்த்து இளையோர் சிந்திக்க வேண்டும். அவரவர் மண்ணையும் அம் மண்ணின் உயிர்களையும் பாதுகாக்கும் அற அரசியல்-பொருளியலுக்குத் திரும்ப வேண்டும். அறிவியல் வளர்ச்சி அதற்கு இசைவாக விளங்க வேண்டும்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

0 கருத்துகள்: