கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"ஊடகர் சவுக்கு சங்கரை சிறையில் வைத்துத் தாக்கிய அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்! --- தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


ஊடகர் சவுக்கு சங்கரை சிறையில் வைத்துத்

தாக்கிய அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்!
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் அறிக்கை!
========================================


ஊடகர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் புனைந்து கோவை சிறையில் அவர் மீது கொடுந்தாக்குதல் நடத்தி, கைமுறிவு உள்ளிட்ட கொடுங்காயங்களை ஏற்படுத்தி இருப்பது, தமிழ்நாடு அரசு உயர்மட்ட அளவில் முடிவு செய்து, நடத்தியிருக்கிற அப்பட்டமான சட்ட மீறலாகும். இதனை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து மிக இழிவான அவதூறுகளை சவுக்கு சங்கர் பேசியதும், அதனை தனது ரெட்பிளிக்ஸ் (RedPix) வலையொளியில், அதன் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு ஒளிபரப்பியதும் ஊடக அறமீறல் என்பது மட்டுமின்றி, தண்டனைக்குரிய குற்றமும் ஆகும். இதன் மீது சட்டப்பிரிவுகளில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றத்தில் நிறுத்துவதை யாரும் தவறென்று சொல்ல முடியாது.

ஆனால், தி.மு.க. அரசையும் குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் இவர்கள் தொடர்ந்து கடுமையாகத் திறனாய்வு செய்து வருகிறார்கள் என்பதால், அவர்கள் மீது வன்மம் கொண்டு, வேண்டுமென்றே தேனி, கோவை, சேலம் போன்ற பல ஊர்களில் வழக்குப் புனைவதும், கஞ்சா வழக்குப் புனைவதும், இவற்றையே காரணம் காட்டி குண்டர் சட்டம் பாய்ச்சுவதும், சவுக்கு சங்கரை வைத்து, பிற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

அதேபோல், பெலிக்ஸ் ஜெரால்டு மீது அடுத்தடுத்து வழக்குகள் புனைவதும் அவரது குடும்பத்தாரை அச்சுறுத்துவதும் கண்டிக்கத்தக்கது.

எனவே, சவுக்கு சங்கர் மீது புனையப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்று, குற்றவியல் சட்டப்படியான உண்மையான வழக்குகள் மீது மட்டும் நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்றும், சவுக்கு சங்கரை கோவை சிறையில் தாக்க ஆணையிட்ட சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் அவரைத் தாக்கிய சிறைக் காவலர்களைக் கைது செய்து, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெலிக்ஸ் ஜெரால்டு குடும்பத்தினரை அச்சுறுத்திய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

0 கருத்துகள்: