கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

"புதிய குற்றவியல் சட்டங்கள் காவல்துறை அரசு நிறுவுவதே!"---- தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

புதிய குற்றவியல் சட்டங்கள்

காவல்துறை அரசு நிறுவுவதே!
========================
தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
========================


ஆரியத்துவ மோடி அரசு கடந்த ஆண்டு நாடாளு மன்றத்தில் நிறைவேற்றிய புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் 2024 சூலை 1 முதல் செயலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டங்களின் பெயர்கள் சமற்கிருதத்துக்கு மாற்றப் படுகின்றன. இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) இனி, ‘பாரதிய நியாய சன்ஹிதா’ என அழைக்கப்படும். அதேபோல், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Indian Criminal Procedure Code - CRPC) இனி, ‘பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா’ என அழைக்கப்படும். அதேபோல், இந்திய சாட்சிகள் சட்டம் இனி, ‘பாரதிய சாக்ஷிய அதினியம்’ எனப்படும்.

இது ஆரியத்துவ மோடி ஆட்சியின் சமற்கிருதத் திணிப்பு. அது மட்டுமின்றி பெரிதும் பழைய நடப்பில் உள்ள சட்டப் பிரிவுகளையே கொண்டிருந்தாலும் அப்பட்டமான மனித உரிமை மீறல் பிரிவுகள் இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒரு குற்ற வழக்கிலோ, போராட்டங்களிலோ கைது செய்யப்படுபவர்களை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தும்போது, நீதிமன்றம் அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைத்து சிறைக்கு அனுப்புகிறது. இதுவே தவறானது. பதினைந்து நாள் நீதிமன்றக் காவல் தேவைதான் என்பதை விசாரித்து உறுதி செய்துகொண்ட பிறகுதான் நீதிமன்றம் ஒருவரை காவலில் வைக்க வேண்டும். ஆயினும் கீழமை நீதிமன்றங்கள், தன் முன் குற்றஞ்சாட்டி நிறுத்தப் படுபவர்களை எந்திரகதியில் 15 நாள் காவலில் வைக்க உத்திரவிடுகிறது. சிறைப்பட்டவர் வெளியில் வர வேண்டும் என்றால் பிணை மனு போட்டு பிணையில் வரலாம்.

இப்போதைய புதிய சட்டத்தில், நீதிமன்றக் காவல் காலம் (Remand Period) 60 நாள் என ஆக்கப்படுகிறது. குறிப்பான காரணங்களை காவல் துறை முன் வைத்தால் இந்தச் சிறைக்காலம் 90 நாள் வரையிலும் நீடிக்கப்படலாம்.

இப்போது நீதிமன்றக் காவல் நாட்கள் 15 என இருக்கும் நிலையிலேயே, மிக எளிய வழக்குகளில் கூட, ஒருவரைப் பிணையில் எடுப்பதற்குக் குறைந்தது ஏழு நாட்கள் ஆகின்றன. இனி நீதிமன்றக் காவல் நாட்கள் 60 என மாறும்போது, பிணையில் வெளியே வருவதற்கு குறைந்தது ஒரு மாதம் ஆகும்.

“பிணை இயல்பானது, சிறை விதிவிலக்கானது” (Bail is Rule, but Jail is Exception) என குடிகான்ட்டி நரசிம்மலு - எதிர் - ஆந்திர உயர்நீதிமன்ற அரசு வழக்குரைஞர் என்ற வழக்கில் (1978)1 SCC 240) 1977 டிசம்பர் 12 அன்று வழங்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து தொடங்கி பல்வேறு வழக்குகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

நீதிமன்றத்தால் ஐயமின்றி ஒருவர் மீதான குற்றச் சாட்டு மெய்ப்பிக்கப்படும்வரை அவர் குற்றமற்றவர் என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற நீதித்துறை நெறிமுறை மற்றும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 21 வழங்கும் உயிர்வாழும் மற்றும் ஆளுடைமை உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் “பிணை இயல்பானது சிறை விதிவிலக்கானது” என்ற கோட்பாடு பின்பற்றப்படுகிறது.

ஆனால் நீதிமன்றக் காவல் 60 நாள் என்றானப் பிறகு நடைமுறையில் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்படுவோரெல்லாம் குறைந்தது 60 நாள் சிறைக் காவலில் வைக்கப்படுவார்கள் என்ற நிலையில் பிணை மறுப்பு அல்லது தாமதம் இயல்பாகிவிடும். இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரானது.

ஒரு வழக்கில் நீதிமன்றம் ஒருவருக்குச் சிறைத் தண்டனை வழங்கும்போது, சிறை சட்ட உரிமை களுக்கு உட்பட்டுதான் அவரைச் சிறைக்குள் வைக்க வேண்டும். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்புவரை சிறை அதிகாரிகள் சில சிறையாளிகளைத் தனிப் படுத்தி, தனிக் கொட்டடிக்குள் (Solitary Confinement) வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தமிழ்த் தேசியப் போராளி புலவர் கலியபெருமாள் உள்ளிட்ட பலரும் இக் கொடுமையை அனுபவித் தார்கள்.

சுனில் பத்ரா - எதிர் - டில்லி நிர்வாகம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் சிறைக்குள் சிறை (யிணீவீறீ ஷ்வீtலீவீஸீ யிணீவீறீ) முற்றிலும் சட்ட விரோதமானது என கடுமையாகக் கண்டித்து தீர்ப்பளித்தது. அதன் பிறகே அக் கொடிய பழக்கம் மறைந்தது.

ஆனால் இந்தப் புதிய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 11, மூன்று மாதம் வரையிலும் ஒருவரைத் தனிமைச் சிறையில் வைக்கலாம் எனக் கூறுகிறது.

ஏற்கெனவே பயங்கரவாதக் குற்றங்களைக் கையாளுவதற்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போன்ற சிறப்புச் சட்டங்கள் அதற்குரிய சிறப்புப் புலனாய்வு அமைப்புகள் - சிறப்பு நீதிமன்றங்கள் ஆகியவை இருக்கின்றன.

அச் சட்டங்களில் குற்றம் சாட்டப்படுவோருக்கு ‘முன் ஆய்வு மன்றங்கள்’ (Review Committee), அதற்குரிய அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகளாவது இருக்கின்றன. அப்படியிருந்தும் கைது செய்யப் படுபவர்கள் உடனடியாக பிணையில் வந்துவிடக் கூடாது என்ற கெட்ட உள்நோக்கத்தோடு, பயங்கர வாதத் தடுப்புச் சட்டம் போன்ற சிறப்புச் சட்டங் களில் கைது செய்யப்படுவதைப் பார்க்கிறோம்.

பீமா கொரேகான் வழக்கு நம் கண் முன்னால் நடந்துவரும் கொடிய எடுத்துக் காட்டு. முற்றிலும் இட்டுக் கட்டப்பட்ட வழக்கில் கைதாகி குறைந்த அளவு மருத்துவ உதவிகூட மறுக்கப்பட்டதோடு உரிஞ்சு குழாய் வைத்த டம்ளர்கூடக் கிடைக்காமல் கண் முன்னால் சிறுகச் சிறுக சித்திரவரை அனுபவித்து மக்கள் தொண்டர் ஸ்டேன்சாமி மரணம் அடைந்ததைப் பார்த்தோம்.

ஆனால் புதிய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 113இல் பயங்கரவாதக் குற்றங்கள் சேர்க்கப்பட்டிருக் கின்றன. ஏற்கெனவே சிறப்புச் சட்டத்தில் முன் அனுமதி பெற வேண்டும், உயர்நிலை அதிகாரிகள் தான் வழக்கைக் கையாள வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும்போதே அரசை எதிர்த்துக் கருத்துக்கூறிய எழுத்தாளர்களும் சிந்தனையாளர் களும் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுவதைப் பார்க்கிறோம்.

ஆனால் இந்தப் புது சட்டத்தில் எந்த முன் அனுமதியும் தேவையில்லை. சாதாரண ‘ஏட்டையா’ கூட இக் குற்றச்சாட்டைக் கையாள முடியும். பயங்கரவாதக் குற்றம் என்பது உலக அளவிலேயே தெளிவாக வரையறுக்கப்பட முடியாத குற்றச் செயலாக இருப்பதை பல நாட்டு நீதிமன்றங்கள் எடுத்துக்கூறி வருகின்றன.

இந்நிலையில், ஒரு சாதாரண காவல்துறை அதிகாரி, பயங்கரவாத வழக்குத் தொடுத்து, அதனை இச் சட்டங்களில் சிறப்புப் பயிற்சி பெறாத சாதாரண நீதிபதிகள் கையாளும்போது, என்ன நடக்கும் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.

இதோ நம் கண் முன்னால் ஏழு தமிழர்களில் ஒருவரான சாந்தனை இழந்திருக்கிறோம். வெறும் பெயர் ஒற்றுமையில் - ஆள்மாறாட்டத்தில் - சிக்கி 35 ஆண்டுகள் கொடும் சிறையில் வாடி விடுதலை யான பின்னும், அதன் பயனைத் துய்க்க முடியாமல் சாந்தன் மரணமடைந்ததைப் பார்த்தோம்.

பஞ்சாபிலும், காசுமீரிலும் பயங்கரவாதம் என்ற பெயரால் ஊடகவியலாளர்களும், வழக்கறிஞர் களும், நீதிபதிகளும் தொகை தொகையாக நீண்ட காலச் சிறையில் வாடுவதையும், தூக்கு தண்டனை பெற்றதையும் பார்த்திருக்கிறோம். இப்போது பொது சட்டத்தில் இக் குற்றப்பிரிவு சேர்க்கப்படும்போது, எந்த அளவுக்கு அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே இந்திய குற்றவியல் சட்டத்தில் 124-A என்றப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றமும் தேசிய மனித உரிமை ஆணையமும் சட்ட ஆணையமும் வலியுறுத்தியும் கூட அக் கொடிய சட்டப் பிரிவு செயல்படாத நிலையில் சட்டப் புத்தகத்தில் நீடிக்கிறது. ஆனால் புதிய சட்டத்தில், 152 என புதிய பிரிவாக அவதாரம் எடுத்து அதே கொடிய பிரிவுக்கு உயிரூட்டப் பட்டுள்ளது.

பழைய 124-A-யிலாவது முன்தகவல் அளித்து நீதிபதியின் அனுமதி பெற்றுதான் வழக்குத் தொடர வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால் புதிய 152இல் வழக்குத் தொடர எந்தச் சிறு தடையும் இல்லை. அது மட்டுமின்றி மின்னணுத் தகவல் களையும் சாட்சியமாக காவல்துறை முன்வைக்கலாம் என புதிய 152 கூறுகிறது.

ஏற்கெனவே பீமா கொரேகான் வழக்கில் ஸ்டேன் சாமி உள்ளிட்ட பலரது கணிப்பொறி அமெரிக்காவில் இருந்து ஊடுருவப்பட்டு (Hacking) குற்றம் சாட்டப் பட்டவருக்கு எதிரான சான்றாவணங்கள் வைக்கப் பட்டன என நீதிமன்றமே ஐயம் எழுப்பியது. (நம் ஊரில் அரசியல் பழிவாங்கலுக்காக காவல் துறையினரே ஒருவர வீட்டுக்குள் கஞ்சாவை வைத்து கைது செய்வதைப் பார்க்கிறோம்)

இன்று வளர்ந்துள்ள செயலிகள் தொழில் நுட்பத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் போலவே பேசுவதும், அவர் போலவே எழுதுவதும் நடக்க வாய்ப்புள்ளது. இது வெளியிலிருந்து வைக்கப்பட்டது என்றோ, செயலியின் வேலை என்றோ குற்றம் சாட்டப்பட்டவர் மெய்ப்பிப்பது எளிதான ஒன்றல்ல.

புதிய குற்றவியல் சட்டத்தில், சேர்க்கப்பட்டுள்ள 43(3) என்றப் பிரிவு, குற்றம் சாட்டப்பட்ட அனை வருக்கும் கைவிலங்கு போடுவதை எளிதாக்குகிறது.

ஏற்கெனவே காவலர் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றவர், பிணையில் வந்தபோது தப்பித்தவர், கொடுங்குற்றவாளி என்பன போன்ற நிகழ்வுகளில் தான் - அதிலும் நீதிமன்ற நடுவர்களின் இசைவோடு தான் - ஒருவருக்குக் கைவிலங்கு போட முடியும் என்ற நிலை இருக்கிறது.

இச்சிக்கலில் நமக்கே ஒரு அனுபவம் உண்டு.

1996 - 98 காலகட்டத்தில், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய ‘ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில்’ உரையாற்றிதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், பேராசிரியர் சுப. வீர பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். வேலூர் சிறையிலிருந்து விசாரணைக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது, காவல்துறையினர் மேற்சொன்ன இருவருக்கும் கைவிலங்கு போட முயன்றார்கள்.

இது சட்டவிரோதம், இதை ஏற்க முடியாது என எதிர்ப்புத் தெரிவித்து “கைவிலங்கு போட அனுமதிக்க மாட்டோம். மீறி முயன்றால் வேலூர் சிறை வாசலிலேயே கீழே அமர்ந்து போராடுவோம். எங்கள் மீது வன்முறை செலுத்தி கைவிலங்கு போடுங்கள் பார்க்கலாம்” எனக் கூறி இருவரும் வேலூர் சிறை வாசலில் அமர்ந்தனர்.

பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் தலையிட்டு, கைவிலங்கு போடாமல் இருவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தார்கள். திரும்பச் செல்லும்போது, கைவிலங்கு போடுவார்கள் என்ற ஐயம் எழுந்தது. நீதிமன்றக் கூண்டிலிருந்த வாறே ஆவேசத்தோடு உரத்தக் குரலில் தலைவர் பெ. மணியரசன் இதனை நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். சைதாப்பேட்டை நீதிபதியும் காவல்துறையினரைக் கடுமையாகத் கண்டித்தார். அது சட்டவிரோதம் என எடுத்துக் காட்டினார்.

உச்ச நீதிமன்றமும் சுனில் பத்ரா வழக்கிலும் பிரேம் சங்கர் சுக்லா வழக்கிலும் இவ்வாறு தேவை யற்று கைவிலங்கு போடுவது சட்ட விரோதமானது எனத் தீர்ப்புரைத்திருக்கிறது. ஆனால் இப்போது புதிதாகச் சேர்க்கப்படும் 43(3) இல் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கைவிலங்கு போடும் ஆபத்து உள்ளது. மேலும் புதிய குற்றவியல் சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் வைத்தபடியே காணொலி வாயிலாக விசாரணை நடத்துவதை இயல்பாக்கும் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் வழக்கறிஞர்களுக்கும் நடக்க வேண்டிய நேரடி தனித்த உரையாடலை மிகப் பெருமளவுக்குச் சுருக்கிவிடும். குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைத் தற்காத்துக் கொள்ளக் கிடைக்கும் வாய்ப்பை வெட்டிச் சுருக்கிவிடும். மொத்தத்தில் இயற்கைநீதியைக் கொன்றுவிடும்.

மேற்சொன்னவை எல்லாம் சில எடுத்துக் காட்டுகளே! மூன்று சட்டங்களிலும் உள்ள புதிய பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்தால், மோடி அரசு நடைமுறையில் ஒரு காவல்துறை அரசை (Police State) நிறுவ முயல்கிறது என்பது தெளிவாகும்.

எனவே அனைத்து சனநாயக ஆற்றல்களும் குறிப்பாக வழக்குரைஞர்களும், ஊடகத்தினரும், இப் புதிய சட்டங்களை மோடி அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, வலுவான மக்கள் இயக்கங்களைத் கட்டி எழுப்ப வேண்டும்.

இல்லையென்றால் மூச்சுவிடும் உரிமைகூட இழந்த உதிரிகளாக நாம் நசுக்கப்படுவோம்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2024 சூலை மாத இதழில் வெளி வந்துள்ள கட்டுரை).

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
 

0 கருத்துகள்: