தமிழில் பெயர்ப் பலகை கோரினால் குற்றமா?
காஞ்சியில் தோழர்களை சிறையிலடைக்கும்
திராவிட மாடல் அரசுக்குக் கண்டனம்!
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் அறிக்கை!
======================================
காஞ்சிபுரத்தில், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டுமென வலியுறுத்திப் பேராடிய மூன்று தோழர்களை, தமிழ்நாடு காவல்துறை கைது செய்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் அதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், அந்தந்த நாடுகளில் – நகரங்களில், அங்கு இயங்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்களை இயல்பாக அவர்தம் தாய் மொழியில் பெரிதாக எழுதுவது வழக்கமானது. ஆனால், தமிழ்நாட்டில் “திராவிட” இயக்கம் முன்னெடுத்த தமிழ் மறுப்பு – ஆங்கிலத் திணிப்பு நடவடிக்கையால், ஆங்கிலத்தில் மட்டும் பெயர்ப் பலகைகளை வைக்கும் அவலம் தலைதூக்கியது.
இந்நிலையில், தமிழறிஞர்களின் தொடர்ச்சியான வலியுறுத்தல்களுக்குப் பிறகு - தமிழ் நாட்டிலுள்ள கடைகள் – வணிக நிறுவனங்கள் – அலுவலகங்கள் முதலியவற்றின் பெயர்ப் பலகைகளை கட்டாயமாகத் தமிழில்தான் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டுமென தமிழ்நாடு அரசு 1983ஆம் ஆண்டும் (அரசாணை எண்: 3312, நாள் : 19.12.1983), அதன் பிறகு 1984ஆம் ஆண்டும் (அரசாணை எண்: 493, நாள்: 29.12.1984) இரண்டு ஆணைகளைப் பிறப்பித்தது. தமிழில் பெரிதாக 50% விழுக்காடும், ஆங்கிலத்தில் 30% விழுக்காடும், தேவையானால் பிற மொழிகளில் 20% விழுக்காடும் கொண்டபடி நிறுவனப் பெயர்களை எழுதும்படி இவ்வரசாணைகள் ஆணையிடுகின்றன.
ஆனால், இதனைக் கண்காணித்து செயல்படுத்துவதற்கு அக்கறைப்படாத அரசாக தமிழ்நாடு அரசு இருக்கிறது. இந்த அரசாணையை செயல்படுத்த வேண்டிய தொழிலாளர் ஆய்வாளர்களோ, வலியுறுத்த வேண்டிய தமிழ் வளர்ச்சித் துறையோ செயலற்று இருக்கின்றன. இந்த நிலையில், தமிழ்த்தேசிய அமைப்புகள் தான், தொடர்ந்து, இந்த அரசாணையை மக்களிடமும், வணிகர்களிடமும் பரப்புரை செய்து விழிப்புணர்வு உண்டாக்கி வருகின்றன. பல வணிகர்கள் தமிழில் மாற்றியும் வருகிறார்கள்.
காஞ்சிபுரத்தில் தமிழர் விடுதலைக் கட்சி, தமிழர் கழகம், தமிழர் வணிகக் களம் போன்ற அமைப்புகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய “தமிழ்ப் பெயர்ப் பலகை பரப்புரை இயக்கம்”சார்பில், “தமிழ்நாட்டைத் தமிழ்ப்படுத்துவோம், காஞ்சியில் செயல்படுத்துவோம், தமிழ்நாடு இங்கே! தமிழ் எங்கே?” என்ற தலைப்பில், கடந்த 18.08.2024 தொடங்கி, 25க்கும் மேற்பட்ட இடங்களில், மக்கள் சந்திப்பு – தெருமுனைக் கூட்டங்கள் வழியாக விழிப்புணர்வு இயக்கம் நடத்தினர். கடந்த மாதம் (18.11.2024) தமிழ்ப் பெயர்ப் பலகை விழிப்புணர்வு பேரணி நடத்தி, அப்பரப்புரை இயக்கத்தை நிறைவு செய்தனர். இந்நிலையில், இவ்வளவு பரப்புரைகளுக்குப் பிறகும் தமிழில் பெயர்ப் பலகைகளை எழுத மறுத்து, தமிழ்நாடு அரசின் அரசாணையையும் கடைபிடிக்காத நிறுவனங்களின் பிறமொழிப் பெயர்களை நேரே சென்று அழிக்கும் போராட்டத்தை 18.12.2024 அன்று முன்னெடுப்போம் என்றும் அத்தோழர்கள் அறிவித்தனர்.
நேற்று (18.12.2024), இப்போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறி, தோழர்கள் மு. மேகநாதன், முகிலன் தமிழ்மணி, சங்கர் ஆகியோரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்ததுடன், அவர்கள் மூவர் மீதும் 294b, 132, 351(2), 3(1) BNS & TNPPDL ஆகிய கொடிய பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, நேற்றிரவே அவர்களை அவசர அவசரமாக வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் அரசாணையை தமிழ்நாடு அரசே கண்டு கொள்ளாத நிலையில் அதை வலியுறுத்திப் போராடிய தோழர்கள் மூவரையும் தமிழ்நாடு காவல்துறை கைது செய்திருக்கவே கூடாது. பிறமொழிப் பெயர்ப் பலகைகள் வைத்துள்ள கடையினர் மீதுதான், அரசாணையை மீறிய குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், வெளியே தமிழ் – தமிழ் எனப் பேசி நாடகமாடும் “திராவிட” மாடல் அரசு, உண்மையில் தமிழை அழித்து, ஆங்கிலத்தைத் திணிக்கவே முனைப்போடு செயல்படுவதை இக்கொடுஞ்செயல் மீண்டும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது.
எனவே, தமிழ்நாடு அரசு இனியாவது தன் தவற்றை உணர்ந்து, கைது செய்யப்பட்ட மூன்று தோழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அரசாணைப்படி தமிழில் பெயர்ப் பலகைகள் எழுதாத நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அரசாணையை நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழத்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================